எடப்பாடி பழனிசாமியை உச்சநீதிமன்றம் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது, இபிஎஸ்யின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டநிலையில், இன்று தீர்ப்பு வெளியானது. அதிமுக பொதுக்குழு தொடரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பை உறுதிசெய்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11,ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்பளித்துள்ளது. மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்த கோரிக்கையும் தங்கள் முன்பு வைக்கப்படாததால் தீர்மானங்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என்றும், எதிர்காலத்தில் இது தொடர்பாக வழக்கோ அல்லது தேர்தல் ஆணையத்தில் முறையீடு யாரேனும் தாக்கல் செய்தால் அப்போது அதன் மீதான நடவடிக்கைகள் சட்டப்படி நடக்கும் என தெரிவித்துள்ளது.

அதேபோல் பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள சூட் வழக்கு மீதான விசாரணை நடைபெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தீர்பில் தெரிவித்ததோடு , அ.தி.மு.க பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இடையீடு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,

‘‘ அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய பழனிசாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக’வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே’’என குறிப்பிட்டுள்ளார்.

இதே போல தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘அதிமுக பொதுக்குழு செல்லும் என்று அளித்திருக்கும் தீர்ப்பானது அ.இ.அ.தி.மு.க வினருக்கு உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் அளித்திருப்பதால் அவர்களின் பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துகிறேன்’’ என கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal