ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கொஞ்சம் சுணக்கமாக இருந்த அ.தி.மு.க.வினர், சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியிருப்பது தி.மு.க.வினரை திகைக்க வைத்திருக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் போட்டியிடுகிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது தேர்தல் களமே வேறு மாதிரி இருந்தது. அதாவது திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருந்தது. திமுக – காங்கிரஸ் கூட்டணி தரப்பு வேகமாக களத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தது.
ஆனால் எதிர் தரப்பில் களம் வேறு மாதிரி இருந்தது. பாஜக போட்டியிடுமா.. போட்டியிடாதா என்ற குழப்பம் இருந்தது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளாரை நிறுத்த முயன்று கொண்டு இருந்தது. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் நாங்களும் வேட்பாளரை நிறுத்துவோம். இல்லையென்றால் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தருவோம் என்று கூறியது. இன்னொரு பக்கம் அமமுக தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்தது. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் அப்படியே பிரியும் நிலை ஏற்பட்டது. மொத்தமாக எதிர்க்கட்சிகள் பல தரப்பாக பிரிந்து கிடந்தன. இந்த நிலையில்தான், தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களத்தில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கி உள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதலுக்கு தற்போது தீர்வு கிடைத்து உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் வந்து இருக்கும் தீர்ப்பு ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்து உள்ளது. அதிமுக இதனால் வலிமை அடைந்து உள்ளது. ஒரு தலைமை கீழ் அதிமுக வந்துள்ளது. ஓபிஎஸ் இல்லாததால் பிரிய வேண்டிய வாக்குகள் ஒன்று சேர்ந்து உள்ளன. ஏற்கனவே, ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அமமுக அறிவித்தது. தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அமமுக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் முன்பே அறிவித்துவிட்டது.
பொதுக்குழு வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு ஈரோடு தேர்தல் களம் எப்படி இருக்கின்றது என அங்கிருக்கும் நடுநிலையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், கட்சி பாகுபாடின்றி அனைவரையும் தி.மு.க. தேர்தல் பணிமனைக்குள் அடைத்து வைத்திருந்தனர். இது பற்றி புகார் இல்லாவிட்டாலும் உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள், ‘என்ன செய்ய ‘5’ கிடைக்கிறதே என இருந்தனர். இந்த நிலையில்தான், அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்தவுடன், தி.மு.க. பணிமனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் திடீரென்று வெளியேறினர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தீர்ப்பு எப்படி வருமோ? என்ற கவலையில் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ஈரோடு கிழக்கில் இலை துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. இதுநாள் வரை இவ்வளவு விட்டமினைக் கொடுத்தும் ‘கை’ வலுவிழக்கும் நிலையில் இருக்கிறது. இந்த விவகாரம்தான் தி.மு.க. தலைமையை கொஞ்சம் திகைப்படைய வைத்திருக்கிறது’’ என்றனர்.