தமிழகத்தில்தான் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறதென்றால், அண்டை மாநிலமான கேரளாவும் அதற்கு விதிவிலக்கல்ல..?
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபரின் நண்பரும், மாணவியுடன் நெருங்கி பழகினார். இதனால் மூவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 18-ந் தேதி அந்த மாணவியை தனது வீட்டுக்கு வருமாறு வாலிபர் அழைத்தார். வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் சென்று விடலாம் என்று மாணவியிடம் வாலிபர் கூறியுள்ளார்.
இதனை நம்பி அந்த மாணவி அன்று மாலை வாலிபரின் வீட்டுக்கு சென்றார். வீட்டில் வாலிபரின் நண்பரும் இருந்தார். அவரை மாணவிக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவருடனும் மாணவி பேசினார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த வாலிபர்கள், பின்னர் மது அருந்த தொடங்கினர். மாணவியையும் மது குடிக்குமாறு கூறினர். முதலில் மது குடிக்க மறுத்த மாணவி, பின்னர் நண்பரின் வற்புறுத்தலால் சிறிது மது குடித்தார். இதில் போதை தலைக்கேறியதால் மாணவி மயங்கி விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாலிபர்கள் இருவரும் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர். அன்று இரவு முழுவதும் மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியை மறுநாள் காலையில் எர்ணாகுளம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி மாணவி, தனது தோழி ஒருவரிடம் கூறி அழுதார். நேற்று கல்லூரிக்கு சென்ற மாணவி மன உளைச்சலுடன் காணப்பட்டார்.
எனவே கல்லூரி ஆசிரியைகள், மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போதுதான் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி மாணவி ஆசிரியைகளிடம் தெரிவித்தார். அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை தேடினர்.
மேலும் மாணவர்களின் செல்போன் எண்களை கொண்டு அவர்கள் பதுங்கி இருந்த இடத்தையும் கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார் இன்று அதிகாலை அவர்கள் இருவரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிடிப்பட்ட இருவரும் இதுபோல வேறு யாரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருவதாக அவர்களை பிடித்த போலீசார் தெரிவித்தனர்.