இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘வெல்லம்’! இந்த நிலையில்தான் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தி.மு.க. தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் ஈரோடு கிழக்கில் வயதான மூதாட்டிகள் மற்றும் இளைஞர் இளம்பெண்களிடம் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் வாக்கு கேட்டு வருவது வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தி.மு.க. தலைமை அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் திருச்சி மாவட்ட அமைச்சர் கே.என்.நேருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில், அம்மாட்டத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், ஈரோடு கிழக்கு பி.பி. அக்ரஹாரம் காமராஜர் நகரில் (பூத் எண் 17) திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் தலைமையில் உடன் பிறப்புக்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு அங்குள்ள மூதாட்டி ஒருவர், ‘என் ஓட்டு முதலமைச்சர் ஸ்டாலிக்குத்தான்’ என அவர் தலையில் கைவைத்து சத்திய வாக்கு கொடுத்ததுதான், அங்கிருந்தவர்களையே பிரம்மிக்க வைத்திருக்கிறது.

சமீபத்தில்தான் உப்பிலியபுரம் தி.மு.க. ஒன்றியச் செயலாளராக ந.அசோகன் நியமிக்கப்பட்டார். இவரது தந்தை அர.நடராஜன் திராவிட பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதால், அப்பகுதிகளில் நன்கு அறிமுகமானவர் என்பதோடு, தி.மு.க.வை அப்பகுதிகளில் வளர்த்தெடுத்தவரும் அவர்தான்.

தி.மு.க.வில் உள்ள சில ஒன்றியச் செயலாளர்கள் ‘கமிஷன்… கலெக்ஷன்…’ என ‘அந்த’ குறியிலேயே இருக்க, இவர் எந்தவொரு கமிஷனுக்கு ஆசைப்படாமல் மக்கள் நலனில் ஈடுபட்டு வருவதுதான் உப்பிலியபுரத்திலேயே இவருக்கான மவுசு கூடி வருகிறது என்கிறார்கள் உண்மையான உடன் பிறப்புக்கள்.

அதே, மவுசை ஈரோடு கிழக்கிலும் காட்டி ந.அசோகன் வாக்கு சேகரித்து வருகிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal