ஈரோடு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ‘குக்கர்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க முடியாது என்பதால், அக்கட்சி இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை.
இந்த நிலையில்தான் கொங்குதேச மறுமலர்ச்சி கட்சி மற்றும் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் முன்னேற்ற சங்கம் ஆகியோரின் ஆசியுடன் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர் கே.பி.எம்.ராஜா ‘பிரஷர் குக்கர்’ சின்னத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்!
பண பலம், படை பலம் மிக்க தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வோடு, விவசாயிகளை நம்பி நாம் தமிழர் கட்சியும் ஈரோடு கிழக்கில் களத்தில் இறங்கியிருக்கிறது. இவர்களுடன், சமூக அமைப்புகளிடம் இருந்து தேர்தல் செலவுக்கு நன்கொடை பெற்று கே.பி.எம்.ராஜா என்பவர் களத்தில் இறங்கியிருக்கிறார்.
தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்ற நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் சந்தித்து வரும், சாயப்பட்டறை கழிவு… தோல் தொழிற்சாலை கழிவு… உள்பட மக்களின் முக்கிய கோரிக்கைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து களத்தில் இறங்கியிருக்கிறார் கே.பி.எம்.ராஜா!
தேர்தல் களத்தில் பணத்தை பாதாளம் வரை பாய்ச்சிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், மற்ற அமைப்புகள் மற்றும் தொழில் அதிபர்களிடம் நிதி உதவி பெற்று, ஒவ்வொரு நாளும் ‘பிரஷர் குக்கர்’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார் கே.பி.எம்.ராஜா… ஈரோடு கிழக்கில் விசில் அடிக்குமா குக்கர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!