மராட்டியத்தில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் தனது கட்சிக்கு எதிராக திரும்பினார். அவர் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்த அவர், பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.

அதன்பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார். உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம்.

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா பெயர், தேர்தல் (வில் அம்பு) சின்னம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிவசேனா பெயர், தேர்தல் சின்னம் வழங்கக்கோரி உத்தவ் தாக்கரே பிரிவு விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்.

இந்த உத்தரவு என்பது ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரின் பக்கம் உள்ள எம்பி, எம்எல்ஏக்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது சிவசேனா சார்பில் 55 பேர் எம்எல்ஏக்களான நிலையில் இதில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டே அணியிலும், 15 பேர் உத்தவ் தாக்கரேவுடனும் உள்ளனர். மாறாக சிவசேனா 18 எம்பிக்களில் 13 பேர் ஏக்நாத் ஷிண்டேவுடனும், 5 பேர் உத்தவ் தாக்கரே உடனும் உள்ளனர். இந்த எம்எல்ஏ, எம்பி மற்றும் தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்து கொண்டது. இதில் உத்தவ் தாக்கரேவை விட ஏக்நாத் ஷிண்டே தான் முன்னணியில் இருந்தது. அதனடிப்படையில் தான் உண்மையான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தான் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு எங்கள் கோரிக்கையை ஏற்று, 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடும் என நம்பிக்கை உள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பு தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கக் கூடாது என ஏற்கனவே கூறி வந்துள்ளதாகவும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்படும் என்றால், ஒரு தொழிலதிபர் அவர்களை வாங்கி முதலமைச்சர் ஆகிவிட முடியுமே? என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அதிமுகவின் உற்று கவனிக்க தொடங்கி உள்ளனர். அதாவது அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இருவரும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறி வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டது. மாறாக இடைக்கால நிவாரணமாக உச்சநீதிமன்றம் பொதுக்குழு மூலம் வேட்பாளர் தேர்வு செய்ய கூறியது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்தது. இது ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் அவரது வேட்பாளரை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அதிமுக வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தல் முடிந்த பிறகும் கூட உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு உடனே வெளியாகாமல் இருக்கும்பட்சத்தில் தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்பு நாடி ஏதேனும் உத்தரவு பிறப்பிக்க கோரினால் அது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சாதகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது தற்போது சிவசேனா கட்சியை பால் தாக்கரே தொடங்கிய நிலையில் அவரது மகன் உத்தவ் தாக்கரே தலைவராக இருந்தார்.

இந்நிலையில் தான் கட்சி எம்பி, எம்எல்ஏக்களின் ஆதரவு யார் பக்கம் அதிகம் உள்ளது என்பது கீ பாய்ண்டாக இந்திய தேர்தல் ஆணையம் பார்த்து உண்மையான சிவசேனா என்பது ஏக்நாத் ஷிண்டே அணி தான் என கூறியுள்ளது. அப்படிப்பார்த்தால் தற்போதைய சூழலில் ஓ பன்னீர் செல்வத்தை காட்டிலும், எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் தான் எம்பி, எம்எல்ஏக்கள் அதிகம் உள்ளனர். இதனால் சிவசேனா கட்சி சந்தித்த நிலையை அதிமுக எட்டினால் அது ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு, எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal