மதுரையில் சிறுமி ஒருத்தியை சித்தப்பா பாலியல் கொடுமை செய்து சீரழித்திருக்கிறார். அச்சிறுமையை சொந்த தாத்தாவே திருமணம் செய்ய முயற்சித்திருக்கிறார்! இதற்கு தாயும் உடந்தையாக இருந்த சம்பவம்தான் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு 4 மகள்கள், 1 மகன் இருந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் முதியவரின் மகன் உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் தாம் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக தனது மூத்த மகளிடம் முதியவர் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மூத்த மகள் வேறொரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக தனது 16 வயது மகளையே திருமணம் செய்துகொள்ளுமாறு தாத்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட முதியவரோ திருமணம் குறித்து உறவினர்களிடம் பேசி அவர்களிடம் சம்மதம் பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.
தனது சொந்த தாத்தாவிற்கு திருமணம் செய்து வைக்க முயற்சி நடப்பதை அறிந்து கொண்ட சிறுமி இது தொடர்பாக தனது அம்மாவின் தங்கை கணவரான சித்தப்பாவிடம் முறையிட்டுள்ளார். நீ ஒன்றும், பயப்பட வேண்டாம் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிறுமியை அரவணைக்கும் தொணியில் பேசி அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி சித்தப்பா அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் பாலியல் ரீதியில் சிறுமியிடம் அத்துமீறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு நாள் சிறுமியும், சித்தப்பாவும் தோட்டத்தில் தனிமையில் இருந்ததை அவரது தாய் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த விவகாரத்தை வெளியில் கூற வேண்டாம். ஆண் வாரிசுக்காக தானே சிறுமியை தாத்தாவுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறீர்கள், ஆண் வாரிசை நானே பெற்று தருகிறேன். மேலும் உனது வீட்டு செலவுக்கு பணமும் தருகிறேன். சிறுமியை எனக்கு திருமணம் செய்து வைத்துவிடு என சித்தப்பா தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைக்கு சிறுமியின் தாயும், தாத்தாவும் ஒப்புக் கொண்டனர். மேலும் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் நீங்கள் இருவரும் வெளியூரில் சென்று திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்குங்கள். யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக சிறுமியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் பொய்யாக புகார் ஒன்றை அளித்துவிடலாம் என முடிவு செய்து அதன்படி புகாரும் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர். இறுதியில் சிறுமியின் சித்தப்பா, தாய், தாத்தா என மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.