எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோடு கிழக்கில் முதன் முறையாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு வானவேடிக்கையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதில் தென்னை மரம் ஒன்று பற்றி எரிந்ததுதான் அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார். இரட்டை இலை சினத்திற்காக அவர் ஈரோடு கிழக்கில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நடந்த ஒரு சம்பவம் தான் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்காகப் பெரியார் நகர் பகுதிக்கு வந்தார். அப்போது அவரை வரவேற்க அதிமுகவினர் அங்குப் பட்டாசுகளை வைத்தனர். வான வேடிக்கையுடன் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் வைத்த வாண வேடிக்கை ஒன்று அருகே இருந்த தென்னை மரத்தில் பாய்ந்தது.
இதன் காரணமாக அங்கிருந்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மரத்தின் உச்சி தீப்பற்றி எரிந்த நிலையில், இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், அப்போதும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்தது. இதனால் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தின் போது திடீரென இப்படி தென்னை மரம் தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘‘பாருங்கள் எங்கள் எடப்பாடியார் வாக்கு கேட்டு வரும்போது, மின்னல் & இடி தாக்கினால்தன் தென்னை மரம் எரியும். ஆனால், அவர் வரும் போதே தென்னை மரம் பற்றி எரிகிறது. எனவே, ஈரோடு மக்களின் மனநிலையிம் தி.மு.க.விற்கு எதிராக இருக்கிறது’’ என்று தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.