ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், கோபம்… கொந்தளிப்பு… ஆக்ரோஷம்… என எடப்பாடி பழனிசாமியின் ‘டோன்’ மாறியிருப்பதுதான் சொந்தக்கட்சியினர் வியந்து பார்க்கின்றனர். வாக்காளர்களை சிந்திக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்…

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு ஆதரித்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் இடையே உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, ‘‘அதிமுக வேட்பாளர் தென்னரசு அவர்களுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். திமுகவினர் வாக்காளர் பெருமக்களை ஆடுகளைப் போல கொட்டகையில் அடைத்துள்ளது ஜனநாயகப் படுகொலை. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை திமுக அமைச்சர்கள் காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. வாக்காளர் பெருமக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட வேண்டும். நான் வேட்பாளரை ஆதரித்து இன்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன் என அறிவித்த நிலையில், ஏழை மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி இன்று அவர்களுக்கு தலா 2000 ரூபாய் கொடுத்து அடைத்து வைத்துள்ளார்கள். ஒருவிதத்தில் எனக்கு மகிழ்ச்சி. நான் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்வதால் அவர்களுக்கு 2000 ரூபாய்க்கு கிடைத்தது. 2 வேளை பிரியாணி சாப்பாடு கொடுத்து உள்ளார்கள்.

திமுகவினர் 25 அமைச்சர்களை ஏவி விட்டு, முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 25 அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் நம்மைக்கண்டு அஞ்சுகிறார்கள். பயப்படுகிறார்கள். ஸ்டாலின் அவர்களே உண்மையிலேயே வேட்டி கட்டி, மீசை வைத்த, தலைவராக இருந்தால், ஆண்மகனாக இருந்தால், வெக்கம், மானம், சூடு, சொரனை இருந்தால் வாக்காளர்களை அடைத்து வைக்காமல் வீட்டிலேயே விட்டு விடுங்கள்.

அதிமுகவின் வேட்பாளரை எதிர்க்க சக்தி இருந்தால் வாக்காளர்களை அடைத்து வைப்பதை விட்டுவிட்டு, நேர்மையான முறையில் சந்தியுங்கள். திமுகவினருக்கு அச்சம் வந்துவிட்டது. பயம் வந்துவிட்டது. தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. அதனால்தான் வாக்காளர்களை அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். தமிழகத்தில் எத்தனையோ தேர்தல் நடைபெற்று இருந்தாலும் இப்படி வாக்காளர்களை அழைத்துச் சென்று அடைத்து வைத்ததாக வரலாறே இல்லை.

இந்தியாவிலேயே இப்படிப்பட்ட நிலை எங்கேயும் கிடையாது. இங்குள்ள தேர்தல் ஆணையம் கண்ணை மூடி கொண்டுள்ளது. இங்குள்ள தேர்தல் ஆணையர் இருக்கின்றாரா.? இல்லையா.? என்றே தெரியவில்லை. இங்குள்ள காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக செயல்பட்டு கொண்டுள்ளது. இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை. அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

ஸ்டாலினின் 21 மாத ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி உயர்த்தியுள்ளனர் என தெரிவித்தார். மேலும் 21 மாத ஆட்சி காலத்தில் அவரது மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து முடிசூட்டு விழா நடத்தியுள்ளார். அதுதான் அவர் செய்த சாதனை’’ என தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal