ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சீறியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘ஈரோடு தேர்தலில் மிகப்பெரும் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படாமல் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் இங்கே முழுக்க முழுக்க தி.மு.க.வின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என தெரியவில்லை. தொகுதி முழுவதும் தி.மு.க.வினர் கட்டுப்பாட்டில் தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் செயல்படுகின்றனர். அனைத்து கட்சிக்கும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் உரிமை உண்டு. அந்த ஜனநாயக உரிமை இந்த தொகுதியில் பறிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி வேட்பாளர் மட்டும் சுதந்திரமாக வாக்கு கேட்க அனுமதிக்கப்படுகிறார்.

எதிர்க்கட்சியான எங்களை வாக்காளர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. தி.மு.க. சார்பாக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறார். வாக்காளர்களை ஒவ்வொரு பூத்துக்கு அழைத்து சென்று 3 வேலை உணவு கொடுத்து ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுத்து இரவில் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். இதன் மூலம் எங்களுக்கு வாக்காளர்களை சந்திக்கும் வாக்கு கேட்கும் உரிமை மறுக்கப்படுகிறது.

தி.மு.க.வினர், காவல் துறையினர் சேர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வாகனங்களை மறிக்கின்றனர். சோதனை என்ற பெயரில் காவல்துறை மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அந்த கூட்டத்தை கூட்ட விடாமல் தடுக்க காவல்துறை அத்துமீறி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு முறையிட்டும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்படும். எனவே மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாக இதில் தலையிட்டு ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் தி.மு.க.வினர் அழைத்து சென்று அடைத்து வைத்துள்ள வாக்காளர்களை விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் வாக்கு சேகரிக்கும் உரிமையை செய்து தர வேண்டும். இல்லையெனில் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை வரும்’’இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal