ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு அ.தி.மு.க. நிர்வாகிகளும் உணர்வுடன் உழைத்து, வாக்கு கேட்டு வருகிறார்கள். ஓ.பி.எஸ். இங்கு வந்தால் உண்மையான உணர்வுடன் உழைப்பாரா? என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

செய்தியாளர்களை சந்தித்து அதிமுக மூத்த நிர்வாகி கேபி முனுசாமி கூறுகையில்,

‘‘திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றிபெற வைப்பதற்காக, தோல்வி பயத்தால் அனைத்து அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலேயே நடைபெறாத ஒரு தேர்தல் அணுகுமுறையை அமைச்சர்கள் கையாண்டு வருகிறார்கள். வாக்காளர்களை சந்திக்க கூடாது என்பதற்காக அவர்களை மண்டபத்தில் பூட்டி வைத்து வருகிறார்கள்.

பணம் கொடுத்து அடக்குமுறையில் ஈடுபட்டாலும், வாக்காளர்கள் தெளிவுடன் இருக்கிறார்கள். திமுகவினர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதேபோல் ஏழைகளுக்காக அதிமுக கொண்டு வந்த திட்டத்தையும் நிறுத்திவிட்டார்கள். இதுவரை கேஸ் சிலிண்டர் மானியம், குடும்ப பெண்களுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கவில்லை. அதேபோல் விலைவாசி உயர்வு, மின் கட்டண பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது. இந்த இடைத்தேர்தலை அதிமுக நல்ல வாய்ப்பாக மட்டுமே பார்க்கிறது. அதனால் தேர்தலை சந்திப்பதில் எங்களுக்கு எந்த பயமுமில்லை. தேர்தல் ஆணையம் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் ஓபிஎஸ் பற்றிய கேள்விக்கு, நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்களில் ஒருவராக ஓபிஎஸ் இருந்தார். ஆனால் பல்வேறு இடையூறுகளில் செய்ததால், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று நிர்வாகிகள் கேட்டார்கள்.

அப்போது நிர்வாகிகளின் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். அதேபோல் ஓபிஎஸ் சொல்லியிருந்தால், பாராட்டி இருக்கலாம். மாறாக தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்த பின், கட்சியை முடக்க முயற்சித்தார். நீதிமன்றத்தை நாடியதோடு, அதிமுக அலுவலகத்திலும் புகுந்து கதவுகளை எட்டி உதைத்து உடைத்தார். அவர் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கை கட்சிக்கு எதிராகவே இருந்தது.

அதனால் அவர் எங்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார். அதனால் மீண்டும் எங்களுடன் இணைய எந்த வாய்பும் இல்லை. அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் தான் ஓபிஎஸ். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தொண்டர்கள் மனப்பூர்வமாக உழைத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி உணர்வுடன் மனதார ஓபிஎஸ் உழைப்பார் என்று கேளுங்கள்’’ என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal