ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் தி.மு.க.வினர் கவனிப்பது பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து ‘எங்க தொகுதிக்கு இடைத்தேர்தல் வராதா?’ என வாக்காளர்களை ஏங்க வைத்துவிட்டது தி.மு.க.!

ஈரோட்டில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணை செயலாளர் சுதீஷ் இன்று காலை பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘‘ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் இளைஞர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எனவே அவருக்கு இந்த முறை வாக்களித்து வெற்றி பெற செய்தால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற சட்டசபையில் குரல் கொடுப்பார். இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு பணநாயகம் அதிகமாக விளையாடுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தினமும் பிரியாணியும் மதுவும் கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள். இதை பார்த்த பொதுமக்களிடையே அந்த கட்சிகள் மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.

நாங்கள் ஓட்டு கேட்க செல்லும் போது எங்கள் கட்சி தொண்டர்களுடன் கட்சி தலைவர் விஜயகாந்தின் விசுவாசிகளான பொதுமக்களும் வருகிறார்கள். ஓட்டு பதிவின் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு தங்கக்காசு மற்றும் பணம் கொடுக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் மீறி எங்களது கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’’ என்றார்.

இதற்கிடையே இன்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்,

‘‘ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரின் திடீர் மறைவையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 22 மாதங்களாக திமுக ஆட்சியில் இருந்தும் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. அதனால், இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற பணத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

திமுக அமைச்சர் திரு கே. என். நேரு அவர்களும், திமுக கூட்டணி வேட்பாளர் திரு. ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களும் வாக்குக்கு பண விநியோக முறைகள், விநியோக மையம் மற்றும் பணம் விநியோகம் செய்வதற்கான காலக்கெடு குறித்து விவாதித்த ஆடியோவை 29 ஜனவரி 2023 அன்று வெளியிட்டோம்.

இந்த ஆடியோ பற்றி கருத்து தெரிவித்த பாஜக தமிழக மூத்த தலைவர்கள், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்துவது குறித்த எங்களின் அச்சங்களை மாநில தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பித்ததுடன், ஜனநாயக உணர்வைக் கொன்ற திமுகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிப்ரவரி 11, 2023 அன்று, ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், திருப்பூர் மாவட்டம், திமுக தெற்கு ஒன்றியப் பொருளாளர் சர்புதீனின் காரில் இருந்த டோக்கன்களை தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடந்த வார இறுதியில் திமுகவினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2 கிலோ இறைச்சியை இலவசமாக (லஞ்சமாக) வழங்கினர். அங்குள்ள வாக்காளர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை வழங்க திமுக அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தைப் பாதிக்கும் வகையில் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

தமிழக பாஜக அளித்த புகாரின் மீது மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் திமுக அரசின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க குறிப்பிடத்தக்க விதத்தில் எதையும் செய்யவில்லை. ஈரோடு கிழக்கில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடப்பதை உறுதி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறோம்’’ இவ்வாறு பாஜகவின் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க.வினர் வாரி வழங்குவதைப் பார்க்கு மற்ற தொகுதி மக்கள் எங்களுக்கு இடைத்தேர்தல் வராதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal