ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெறுவார் எனவும், தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதாக இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பின் சார்பாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் சி.திருநாவுக்கரசு ஆய்வு அறிக்கையை சென்னை சேப்பாக்கத்தில் வெளியிட்டார். அதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சுமார் ஆயிரத்து761 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 45% பெற்று முதலிடமும் , அதிமுக வேட்பாளர் தென்னரசு 39.52% பெற்று இரண்டாவது இடமும், நாம் தமிழர் கட்சி மேனகா 9.51% பெற்று மூன்றாவது இடமும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு 59% பேர் வரவேற்பும் 28% பேர் அதிக வரவேற்பும் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பதை 51% பேர் விரும்பவில்லையென்றும், 39% பேர் விருப்பமும், 10% பேர் எதுவும் சொல்வதற்கில்லை என தெரிவித்திருப்பதாக அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு 49% பேர் ஆதரவும், 35% எதிர்ப்பும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. யாருடைய ஆட்சி சிறந்த ஆட்சி என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமிக்கு 53% மு.க.ஸ்டாலினுக்கு 42% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal