விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது. என்றாலும் கூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று தமிழ் தேசிய அமைப்புகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன், ‘‘எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பிய சிங்கள மக்களின் போராட்டம் தமிழின தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ் இன தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக்க நலமுடன் இருக்கிறார் என தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இதுவரை அவரை பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இந்த செய்தி உறுதியான முற்று புள்ளி வைக்கும் என்று நம்புகின்றேன். தமிழின மக்களுக்கு தமிழ் ஈழத்துக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க அறிவிப்பார் என்று தெரிவிக்கின்றேன்; தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை அளிக்க வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்’’ என்றவர், ‘‘பிரபாகரன் அனுமதியின் பெயரிலேயே இந்த விஷயத்தை நான் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்’’என்றார்.