எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அபராதத்துடன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!

கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால், மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாகக் கூறி, சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும், அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டுமென கடந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி தமிழக முதல்வரின் முகவரி துறையிடம் மனு அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல் துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளாமல் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி, வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal