100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டிருப்பதை கண்டித்து போராட்டம் நடைபெறும் வேளையில், இதற்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது அதிர்ச்சியளிக்கிறது.

மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை கடந்த ஆண்டை விட 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று பயனாளர்கள் மற்றும் சமூக ஆர்வர்லர்கள் போரட்டம் நடத்த உள்ளனர். 2023-&24 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1 ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 33% குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட ரூ. 60 ஆயிரம் கோடி நிதி குறைவாக நடப்பு நிதியாண்டில் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு நூறு நாட்கள் வேலை வழங்கப்பட்டு அதற்கான சம்பளம் வழங்கப்படுகிறது. கிராமப்புறத்தில் வாழும் எளிய மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறைக்கப்பட்டு இருப்பது, பல்வேறு பாதிப்புகளையும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும் எனக்கூறி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் திட்ட பயனாளிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.

100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டிருப்பதற்கு ஆதரவு வந்திருப்பதுதான் ஆச்சர்யத்தை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக திருச்சி புறநகர் மாட்டத்தில் 100 நாள் வேலை பணியாளர்கள் சிலரிடம் பேசினோம்,

‘‘சார், 100 நாள் வேலை திட்டம் என்பது ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் மத்திய & மாநில அரசுகளின் நிதியில் உருவாக்கப்பட்டது. ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் அரசு ஊழியர்களின் மனைவிகளும் பணிக்கு வந்து பலனடைகிறார்கள். அவர்களது கணவர் மாதம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கியும் அவர்களை மனைவிகளை 100 நாள் வேலைக்கு அனுப்பிவிடுகின்றனர். (ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அட்டை வைத்திருப்பவர்கள் பற்றி விசாரணை நடத்தினாலே இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடும்) இந்த வேலைக்கு வந்து போட்டோ எடுத்துகொள்வதோடு சரி, அவர்கள் சொந்த வேலைக்கு சென்று விடுகின்றனர்.

அதே போல், பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிளர்க்குகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பணத்தை சுருட்டிவிடுகின்றனர். 100 நாள் வேலையைப் பொறுத்தளவில், உண்மையான ஏழைகள் கொஞ்சம்பேர்தான் பலனடைகிறார்கள். எனவே, அரசு ஊழியர்களின் மனைவிகள் எதற்காக 100 நாள் வேலைக்கு வருகின்றனர். அவர்களுக்கு எப்படி பஞ்சாயத்து தலைவர் 100 நாள் அட்டை கொடுக்கிறார் என்பதை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் பஞ்சாயத்து கிளர்க்குகள் மூலமாக பி.ஓ.வு.க்கும் கமிஷன் செல்வதால் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்’’ என்று நம்மிடம் குமுறினார்கள்.

100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி குறைத்ததற்காக போராட்டம் நடக்கும் வேளையில், அதே 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் ஊழலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதுதான் வேதனை அளிக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal