மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி புதிய பொறுப்பை அளித்துள்ளாராம்.

வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ.க, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை நிர்மலாவிற்கு கொடுத்துள்ளார் மோடி. ஐந்து முறை மத்திய பட்ஜெட்டை தயாரித்து தாக்கல் செய்தவர் நிர்மலா. எனவே, இவர் பா.ஜ.க,வின் 2024 தேர்தல் அறிக்கையை தயார் செய்தால் நன்றாக இருக்கும் என, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னாராம் மோடி.ஒன்பது பேர் உள்ள தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக நிர்மலா செயல்படுவார். இக்குழுவில், பொருளாதார நிபுணர்கள், சீனியர் பா.ஜ.க, தலைவர்கள், மூத்த எம்.பி.,க்கள் என பலர் உள்ளனராம். நிர்மலா அறிக்கை தயாரிக்கும் பணியில் இறங்கிவிட்டார்.

இதற்காக, அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து, அங்குள்ள பா.ஜ.க, தலைவர்களிடம் ஆலோசனை செய்யப் போகிறாராம். ‘இந்த மாநிலங்களின் தேவை என்ன என்பதை தெரிந்து, அவற்றை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்வேன்’ என்கிறாராம் நிர்மலா. தமிழகத்திற்கு என்ன தேவை என, தமிழக பா.ஜ.க,வினரிடம் ஆலோசனை கேட்க உள்ளாராம்.

அதோடு, தமிழக அரசியலில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வரும் கச்சத் தீவு விவகாரத்தை கையில் எடுக்க பா.ஜ., முடிவெடுத்துள்ளதாம். ‘மூன்றாவது முறையாக பா.ஜ.க, ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ், – -தி.மு.க., கூட்டணியால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவு மீட்கப்படும்’ என்ற உறுதிமொழி தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என சொல்லப்படுகிறது.

இதுதவிர, தமிழகத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவிக்க இருக்கிறாராம் நிர்மலா சீதாராமன்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal