இதுநாள் வரை ஓ.பி.எஸ்.ஸை தாங்கிப் பிடித்த பா.ஜ.க. திடீரென கைவிட்டது ஏன் என்ற தகவல்கள் தற்போது கசிய ஆரம்பித்திருக்கிறது.

சமீபத்தில் பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டாவின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுடில்லியில் நடைபெற்றது.

இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, மணிப்பூர் கவர்னர் இல.கணேசன், தெலுங்கானா கவர்னர் தமிழிசை, பா.ஜ., பொதுக் குழுவில் உள்ள தமிழக தலைவர்கள் என, தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது, நட்டா தமிழக தலைவர்களுக்கு தனியாக விருந்து அளித்தாராம். இந்த விருந்தின் போது, அண்ணாமலையிடம் பேசிய நட்டா, ‘‘அ.தி.மு.க., தலைவர் பழனிசாமியுடன் தொடர்ந்து பயணம் செய்யுங்கள்; அவருடன் தான் நாம் இருக்க வேண்டும்’’ என்றாராம். பழனிசாமியுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்கிற முடிவை எடுப்பதற்கு முன், நட்டா தமிழக பா.ஜ.க, பொறுப்பாளர் சந்தோஷுடன் கலந்து ஆலோசித்தாராம்.

பின், பிரதமர் மோடியிடமும் ஆலோசனை நடத்தப்பட்டதாம். கடைசியில் தமிழக பா.ஜ.க, ‘‘பழனிசாமியுடன் இணைந்து செல்வது தான் நல்லது’’ என்கிற முடிவு எடுக்கப்பட்டதாம்.இதற்கிடையே, அ.தி.மு.க.,வின் இரண்டு கோஷ்டிகளிடமிருந்தும், புதுடில்லி பா.ஜ.க, தலைவர்களுக்கு பல அழுத்தங்கள் வந்ததாம். பழனிசாமிக்கு நெருக்கமான அ.தி.மு.க., – எம்.பி., தம்பிதுரை பல முறை நட்டாவை சந்தித்து தமிழக நிலவரம் குறித்து விளக்கியிருக்கிறார்.

அதன் பிறகு மத்திய உளவுத்துறை மூலம் அ.தி.மு.க.வில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது பற்றி ஒரு சர்வே எடுக்கப்பட்டதாம், அது எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக வந்திருக்கிறது. ‘நீதிமன்றத்தையும், பா.ஜ.க. மேலிடத்தை மட்டுமே நம்பி ஓ-.பி.எஸ். காய்நகர்த்தி வருகிறார்’ என்பதை புரிந்து கொண்ட மேலிடம் ஓ.பி.எஸ்.ஸை கைவிட்டுவிட்டது.

பொதுக்குழு விவகாரத்திலும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal