முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தாலும், அவரது மனது ஈரோடு கிழக்கிலேயே இருக்கிறது. மாபெரும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் 12 அமைச்சர்களையும், 19 மாவட்டச் செயலாளர்களையும் தேர்தல் பொறுப்பாளர்களாக பணியமர்த்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழுவில் இடம்பெறாத அமைச்சர்கள் என ஒரு பெரிய படையே திமுக தரப்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றியை தனது கவுரவ பிரச்சனையாக கருதுவதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றாலும் அவரது வெற்றி பிரம்மாண்ட வெற்றியாக இருக்க வேண்டும் என விரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். வாக்கு வித்தியாசம் குறைந்தது 50,000 இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகால திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் மதிப்பெண்களாக தேர்தல் முடிவு பார்க்கப்படுவதால் இவ்வளவு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் கடுமையான இன்ஸ்ட்ரக்ஷனுக்கு பிறகு அமைச்சர்கள் முழுமையாக அங்கு முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
சென்னையில் இருந்தாலும் கூட ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் நடக்கும் ஒவ்வொரு நகர்வையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக முக்கிய அமைச்சர்களை தினமும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் அவர், ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சார நிலவரம் குறித்து கேட்டறிந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல தொகுதியில் இந்தந்த இடங்களில் இந்தந்த பிரச்சனைகள் இருக்கிறதே அதையெல்லாம் சரிசெய்துவிட்டீர்களா எனக் கேட்டு அமைச்சர்களை திகைக்க வைக்கிறார்.
அதாவது, ‘நாம் களத்தில் இருந்து சில பிரச்னைகள் நேரடியாக பார்க்கிறோம். சென்னையில் இருக்கும் முதல்வருக்கு எப்படி இந்த தகவல்கள் உடனடியாக செல்கிறது’ என்று மூத்த அமைச்சர்களே திகைப்பில் இருக்கிறார்களாம்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முதலமைச்சர் பிரச்சாரத்துக்கு வருவதற்கு முன்பாகவே அங்கு நிலவும் அதிருப்திகளை சரிசெய்து குறைகள், கோரிக்கைகள், பிரச்சனைகளை களைய அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.