ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இது தொடர்பாக கருத்துக்கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில்,

‘‘ ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய அல்லது பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுவதற்கான வரையறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126-ஏ பிரிவின்படி, இந்த காலகட்டத்தில் யாரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடவோ அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்பவோ கூடாது.

ஒரு பொதுத்தேர்தலின்போது, வாக்குப்பதிவுக்கு முதல் நாளில் வாக்குப்பதிவிற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரைமணி நேரம் வரை கருத்துக் கணிப்புக்கான தடை தொடரும். இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தடை தொடரும்.

பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தடை தொடரும். இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

அந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வரும் 16-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 27-ந்தேதி மாலை 7 மணிவரை வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது மற்றும் அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு முறையில் பரப்புவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களின்போது, வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடையும் 48 மணி நேர கால அளவில் (25-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து 27-ந்தேதி மாலை 6 மணிவரை) எந்தவித கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது’’ இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal