ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேரிடம் நடைபெற்ற உண்மை கண்டறியும் சோதனையில் 12 பேரில் 11 பேர் பொய்யான தகவல் அளித்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவரது கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, தில்லை நகர் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் பல ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. பின்னர், சிறப்பு புலனாய்வு குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில், ராமஜெயம் கொலை நடந்த அன்று திருச்சியில் முகாமிட்டிருந்த 20 ரவுடிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் திட்டமிட்டனர்.

இதற்காக திருச்சியை சேர்ந்த சாமிரவி, திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சத்யராஜ், தினேஷ், திலீப், தென்கோவன், ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேரிடம் சோதனை நடத்த திருச்சி நீதிமன்றம் மூலம் முறையான அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல்துறை அலுவலகத்தில் 12 பேருக்கும் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 4 பேர் வீதம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் இருந்து வந்திருந்த மத்திய தடயவியல்துறை நிபுணர்கள், 12 பேரிடமும் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை கேட்டு அவற்றுக்கு பதில் பெற்றனர்.

இந்நிலையில், உண்மை கண்டறியும் சோதனையில் பங்குபெற்ற 12 பேரில் 11 பேர் சோதனையின்போது பொய்யான தகவலை கூறியிருப்பது தெரிய வந்துள்ளது. திலீப் என்ற நபர் ஒருவர் மட்டுமே உண்மையை கூறியிருக்கிறார். இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை தொடங்க சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal