காங்கிரசை தோளில் சுமந்து கொண்டு செல்லும் தி.மு.க.விற்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த விவகாரம்தான் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதற்கு மறுநாள் பிப்.1ஆம் தேதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நடைபெற இருந்தது. இருப்பினும் முதல் சில நாட்கள் அவையை எதிர்க்கட்சிகள் முற்றிலுமாக முடக்கின. அதானி குறித்து ஹிண்டர்ன்பெர்க் அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் 2 நாட்களில் சுமார் 12 மணி நேர விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு நேற்று முன்தினம் பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். பின்னர் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‘‘சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி 90 முறை மாநில ஆட்சியை கலைத்தது யார் தெரியுமா? அதிலும் ஒருவர் மட்டும் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி 50 முறைகளுக்கு மேல் மாநில ஆட்சியை கலைத்திருக்கிறார். அது இந்திரா காந்தி தான். மாநில ஆட்சியை கலைப்பதில் அரைசதம் அடித்திருப்பவர் இந்திரா காந்தி தான்’’ என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியை கவிழ்த்தது இந்திரா காந்தி. அந்த இந்திரா காந்தியின் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளீர்கள் என்று திமுகவை பார்த்து கேள்வி எழுப்பினார். அதேபோல், எம்ஜிஆர் ஆட்சியையும் காங்கிரஸ் கட்சி கலைத்திருக்கிறது. அதேபோல் எதிர்க்கட்சி வரிசையில் நிற்கும் சரத் பவார் முதலமைச்சராக இருந்த போது, அவரின் ஆட்சியையும் கலைத்ததும் காங்கிரஸ் தான். ஆந்திராவில் என்டிஆர் ஆட்சியை கலைக்க காங்கிரஸ் முயற்சித்தது. இப்போது ஏராளமான கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்றன. ஆனால் ஒரு காலத்தில் அந்த கட்சிகள்மாநில அரசுகளை கலைத்தது காங்கிரஸ் தான் என்று ஆவேசமான விமர்சித்தார்.
தொடர்ந்து, ஏழை எளிய மக்கள், பழங்குடிகள், பெண்கள் மற்றும் தலித் சமூகத்திற்காக பாடுபடுவது காங்கிரஸ் அல்ல. காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்டதை விடவும் பாஜக ஆட்சியில் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் தரமாக செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. நான் மக்களுக்காக இங்கு நிற்கிறேன். என்னை எதிர்த்து எவ்வளவு பேர் நிற்கிறார்கள் பாருங்கள். இருப்பினும் நான் தனியாக நிற்கிறேன். நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக நிற்கிறேன் என்று தெரிவித்தார்.
பின்னர், நேரு சிறந்த மனிதர் எனில் அவரது குடும்பத்தினர் நேருவின் பெயரை ஏன் குடும்பப் பெயராக வைக்கவில்லை. நேருவின் பெயரை குடும்பப் பெயராக வைத்துக் கொள்வதால் என்ன அவமானம் ஏற்படப் போகிறது. மத்திய அரசு திட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதால் சிலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். ஆனால் முன்பு 600க்கும் மேற்பட்ட அரசு திட்டங்களின் பெயர்கள் காந்தி, நேரு பெயர்களில் இருந்தன என்று விமர்சித்தார். பிரதமர் மோடியின் பேச்சிற்கு ஆதரவாக பாஜகவினர் மேஜையை தட்டி ஆதரவளித்தனர். மறுபுறம் எதிர்க்கட்சிகள் அதானி, அதானி என்று முழக்கமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மோடியின் ஆவேசம் குறித்து டெல்லி சோர்சுகளிடம் பேசினோம்,
‘‘சார், காங்கிரஸ் அல்லாத பாரதத்தை உருவாக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு. ஆனால், அந்த இலக்கிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான் முட்டுக்கட்டை போட்டுவருகிறார். மே.வங்க முதல்வர் மம்தா கூட, காங்கிரஸை தோளில் சுமப்பதை தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில்தான் சட்டப்பிரிவு 356 &ஐ பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்த காங்கிரசுடன் தி.மு.க. உறவு வைத்துக்கொண்டிருப்பதை பிரதமர் மோடி கடுமையா விமர்சித்திருக்கிறார். அதாவது, ‘மடியில் கணமில்லாமல் இருந்தால் வழியில் பயமில்லாமல் செல்லலாம்’ ஆனால், தி.மு.க.வினரால் அப்படி செல்ல முடியுமா? ஒரு சிலரைத் தவிர மற்ற முக்கிய அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்கு… அமலாக்கத்துறை விசாரணை… என தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்தான், மோடி இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியால் தி.மு.க. மிகப்பெரிய ஆபத்தை சந்தித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாற்றி யோசிக்க வேண்டும். மறைந்த ஜெயலலிதாகூட இப்படி யாருக்கும் கண்மூடிக்கொண்டு ஆதரவு கொடுத்ததில்லை. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலினின் கண்மூடித்தனமான ஆதரவை பார்த்துதான், ‘எங்களுக்கும் 356&ஐ பயன்படுத்தத் தெரியாதா?’ என்ற வகையில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்’’ என்றனர்.