தி.மு.க.வின் ‘பி – டீம்’ அ.ம.மு.க. என்பதை மீண்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிரூபித்துவிட்டார் டி.டி.வி.தினகரன் என அவருக்கு நெருக்கமானவர்களே சிலர் கிசுகிசுத்து வருகிறார்கள்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆர்.கே.நகரில் டி.டி.வி. வெற்றி பெற்றால், எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிடும் என அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கணக்குப் போட்டது. இதனால், அங்கு ஒரு மூத்த பத்திரிகையாளர் ஒருவரை தி.மு.க. களத்தில் இறக்கிறது. இடைத்தேர்தலில் ஒரு பலமான வேட்பாளரை தி.மு.க. நிறுத்தவில்லை என சர்ச்சைகள் எழுந்தன.

ஆனால், ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றும், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஆபத்தை விளைவிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் இன்று, இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க. போட்டியிட்டாலும் பத்தாயிரம் வாக்குகள்தான் கூடுதலாக வாங்கும் என்று அ.தி.மு.க.வினரை குழப்பிக் கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன்!

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியில் இருந்து விலகியது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

‘‘ ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் 7-ந் தேதி தான் குக்கர் சின்னம் கிடையாது என அறிவித்தது. முன்கூட்டியே அறிவித்திருந்தால் நாங்கள் சுப்ரீம் கோர்ட் சென்று குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்க அனுமதி வாங்கி இருப்போம் என தெரிவித்தார்.

நீதிமன்றம் செல்ல உரிய கால அவகாசம் இல்லாததால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லையென தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தான் தங்களது எதிர்கள் என தெரிவித்தவர், அவர்களுக்கு மாற்றாக தங்களது வாக்கை பதிவு செய்வார்கள் என தெரிவித்தவர் இது தொடர்பாக 12ஆம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே இருந்த பதவி சண்டை காரணமாக தமிழ்மகன் உசேன் கையெழுத்து போடும் வினோதமான, விசித்திரமான நிலை ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக தமிழ்மகன் உசேன் தான் கையெழுத்து போடமுடியும் என உச்சநீதிமன்றம் கூறினால் நிலைமை என்ன ஆகும் என கேள்வி எழுப்பினார்.

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தால், இபிஎஸ் தரப்பு 5,000 முதல் 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும் என கூறினார். எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கினாலும் தற்போது அந்த சின்னம் செல்வாக்கு இழந்ததாகவே கருதப்படுகிறது. தற்போது அதிகாரம், ஆணவப்போக்குடன் செயல்படும் எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் மதிப்பு இழந்து விட்டது’’ என குற்றம்சாட்டினார்.

அ.தி.மு.க. மீது டி.டி.வி. வைக்கும் திடீர் குற்றச்சாட்டுகள் குறித்து, அ.ம.மு.க.வில் அதிருப்தியில் இருக்கும் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், எடப்பாடி பழனிசாமியாவை தன்னிடம் இருக்கும் நிர்வாகிகளை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். டி.டி.வி.தினகரன் தன்னிடம் இருக்கும் முக்கிய நிர்வாகிகளான செந்தில்பாலாஜி, தர்மபுரி பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளை தி.மு.க.விற்கு அனுப்பி வைத்துவிட்டார்.

காரணம், தற்போதே அவர் முதல்வர் கனவில் மிதந்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, பல இடங்களில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு காரணமான டி.டி.வி., சில இடங்களில் தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். தற்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தொண்டர்களை தொடர்ந்து குழப்பி வருகிறார்’’ என்றனர்!

நெருப்பில்லாமல் புகையுமா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal