வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.வில் ஓ.பன்னீர் செல்வம் ஐக்கியமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் ஒரு வழியாக அதிமுக தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளது. கே.எஸ் .தென்னரசு சார்பாக பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுகவின் 111 நிர்வாகிகள் களத்தில் இறங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

நேற்று அதிமுகவின் ஸ்டார் பிரச்சரக்காரர்கள் பட்டியலும் கூட இதற்காக வெளியிடப்பட்டது. ஒரு பக்கம் அதிமுகவில் எடப்பாடி அணி இப்படி தீவிரமாக பணிகளை செய்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் அப்படி ஒடுங்கி போய் இருக்கிறாராம். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அவர் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது கேட்க கொஞ்சம் ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக இருந்தாலும், எடப்பாடிக்குதான் மறைமுகமாக இந்த தீர்ப்பு சாதகமாக அமைந்து இருந்தது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போட்டது.

எடப்பாடி இதனால் எளிதாக தான் அறிவித்த கே.எஸ் தென்னரசுவை பொதுக்குழு மூலம் தேர்வாக வைத்தார். அதோடு இரட்டை இலை சின்னமும் எடப்பாடியின் விருப்பம் போலவே அவருக்கு கிடைத்துவிட்டது. ஓ பன்னீர்செல்வம் தரப்பின் மிகப்பெரிய தோல்வியாக இது பார்க்கப்படுகிறது. ஈரோடு இடைத்தேர்தல் வருகிறது.. இதுதான் அதிமுகவில் நாம் ரீ என்ட்ரி கொடுக்கும் நேரம். நம்மை ஒதுக்கியவர்கள் நம்மை தேடி வரும் நேரம். சின்னத்தை முடக்குவோம். அதன் மூலம் நம் பவரை காட்டுவோம் என்று இருந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு இந்த முடிவு பெரிய மனஉளைச்சலை கொடுத்து இருக்கிறதாம்.

இது பற்றி ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான வட்டாரத்தில் உள்ள சிலரிடம் பேசினோம்.

‘‘சார், ஓ.பன்னீர்செல்வம் தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் புலம்பிக்கொண்டு இருக்கிறாராம். நேற்று தனது வீட்டில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், என்னங்க இப்படி எல்லாம் தப்பா நடக்குது. நேரம் சரியில்லையா.. சனி பெயர்ச்சிக்கு அப்பறம் நடக்குறது எல்லாமே நமக்கு எதிரா இருக்கே.. முதல்ல வேட்பாளர் விவகாரத்தில் தோல்வி அடைந்தோம்.. இப்போ பாஜக கூட எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைக்குதே என்னங்க பண்ணுறது என்று ஓ பன்னீர்செல்வம் புலம்பி இருக்கிறாராம். அண்ணாமலை சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறி அறிக்கை வெளியிட்டார். ஓ பன்னீர்செல்வத்தை அதில் வெறும் அண்ணன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

தன்னை வெறும் அண்ணன் என்று பாஜக அழைத்ததால் ஓ பன்னீர்செல்வம் கடும் மன வருத்தத்தில் இருக்கிறாராம். இதையும் குறிப்பிட்டு அவர் நேற்று வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் ஓ பன்னீர்செல்வம் பெரிதாக வெளியே கூட தலைகாட்டாமல் இருக்கிறாராம். சமீபத்தில் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் சார்பாக நிறுத்தப்பட்டு இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர் செந்தல் முருகன் வாபஸ் வாங்கப்பட்டார். இந்த அறிவிப்பை வெளியிட ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பிற்கு கூட வரவில்லை. ஓபிஎஸ் தரப்பு நிர்வாகி கு.ப.கிருஷ்ணன்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு முன்னதாக அதிமுக பொதுவேட்பாளரை, அதாவது இரட்டை இலை சின்னத்தின் கீழ் நிற்கும் வேட்பளாரை ஏற்றுக்கொள்வோம் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தது. இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று தெரிவித்தது. அந்த அறிக்கையை ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த அறிக்கையை கூட படிக்க கூட ஓ பன்னீர்செல்வம் நேரில் வரவில்லை.

இப்படி தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்து ஓ பன்னீர்செல்வம் வீட்டிலேயே முடங்கி இருக்கிறாராம். இதற்கு காரணம் அவரின் மன வருத்தம்தான் என்கிறார்கள் ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவர்கள். அண்ணன் அதிரடி அரசியல் செய்யாமல்.. அன்பாக டெல்லியின் ஆதரவை பெற முயன்றார். யாரையும் அவர் எதிர்க்கவில்லை. எடப்பாடியிடம் கூட என்னை சேர்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் கூறினார். ஆனால் எல்லாம் அவருக்கு எதிராக சென்றுவிட்டது. அதனால் மன வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள். விரைவில் ஓ பன்னீர்செல்வம் கருப்பசாமி கோவிலில் பூஜை போடுவார். அவர் இப்போது கடைசியாக நம்பி இருப்பது பொதுக்குழு வழக்கை மட்டுமே. அந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன் ஒரு முறைகருப்பசாமி கோவிலில் பூஜை போட இருக்கிறார்’’ என்று சொன்னவர்கள் அடுத்து சொன்னதுதான் அதிர்ச்சி ரகம்!

அதாவது, ‘‘சசிகலாவும் தன்னை கைவிட்டு விட்டார். டி.டி.வி.தினகரனை நம்பி எதிலும் இறங்க முடியாது என்று தெரிந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, தன்னுடன் இருக்கும் சில நிர்வாகிகளுடன் பா.ஜ.க.வில் இணையப் போகிறார்’’ என்றனர் அதிர்ச்சி விலகாமல்!

பொறுத்திருந்து பார்ப்போம்…!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal