அதிமுகவினர் இன்றைய தினம் படுகுஷியில் உள்ளனர். ஈரோடு கிழக்கில், எப்போதும் இல்லாத உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைத்திருப்பதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். கடந்த 10 நாட்களாகவே ஈரோடு கிழக்கு தொகுதியில், கலக்கத்துடனும், குழப்பத்துடனும், வலம்வந்து கொண்டிருந்த அதிமுகவினர், இப்போது தேர்தல் களத்தில் முன்பை விட சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் ஈடுபட்டுள்ளனர். வருகிற 9-ந்தேதி ஈரோட்டில் தென்னரசுவை வேட்பாளராக அறிமுகம் செய்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கான கூட்டம், பெருந்துறை ரோடு முத்து மஹால் அருகே நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. அந்த மேடையே படுபிரம்மாண்டமாக இருக்கிறதாம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு நடத்தப்படுகிறது.

கூட்டணி கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்பார்கள் என்று சொல்கிறார்கள். இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் தமாகா வேட்பாளர் யுவராஜ் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார். ஆனால், அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தன்னுடைய மொத்த பலத்தையும் நிரூபிக்கும் தேர்தலாகவே இந்த தேர்தல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.

அதற்காகவே, தமாகாவுக்கு பதில், எடப்பாடி நேரடியாகவே போட்டியிட களமிறக்கி உள்ளதாகவும் தெரிகிறது. வழக்கம்போல் ஆளும்கட்சி மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் என்றாலும், இந்த முறை எடப்பாடி டீம், திமுக அரசுக்கு எதிரான விஷயங்களை எல்லாம் லிஸ்ட் போட்டு கையில் வைத்துள்ளதாம். இவைகளைதான் அம்மக்களிடம் கொண்டு செல்ல போகிறாராம் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்றும் கணக்கு போட்டுள்ளாராம்.

அதேபோல, மூத்த தலைவர் செங்கோட்டையனும் இன்றைய தினம் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.. முன்னதாக, இன்று காலை ஈரோடு மணல்மேடு பகுதியில் உள்ள பாலமுருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் குபேர மூலையில் இருந்து தொடங்கியுள்ளது.குபேர மூலை என்றாலே செல்வம் தரும். வெற்றியைத் தரும். இதிலிருந்தே நாங்கள் வெற்றி இலக்கை அடைந்து விட்டோம் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அவர்கள் சொல்லும்போது எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக ஆக வேண்டும். திண்டுக்கல், மதுரையில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி அடைந்தது போல் ஈரோடு இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் தென்னரசு மிகப்பெரிய வெற்றி அடைவார் என்றார்.. ஆக, இரட்டை இலை சின்னம் உறுதியாகி உள்ள இந்த நாளில்தான், கடைசி நேரத்தில், பாஜகவும் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. இந்த நாளில்தான் செங்கோட்டையனும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.. ஆகமொத்தம், அதிமுகவுக்கு “குபேர மூலை” ஒர்க் அவுட் ஆகுமா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal