கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நண்பனுக்கு கறிவிருந்து மற்றும் ‘சரக்கை’ ஓவராக கொடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்த விவகாரம்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் மொட்டையன் காலனியை சேர்ந்தவர் மணி (32). இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மணியின் நண்பரான சிவக்குமாருக்கும் கோவிந்தம்மாளுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் மணிக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை எச்சரித்துள்ளார். ஆனால், இதுதொடர்பாக நண்பனிடம் கேட்க மணி தயங்கினார்.
இந்நிலையில், உனக்கு பிடித்த கறி குழம்பை செய்துள்ளேன் வீட்டிற்கு வா இரண்டு பேரும் மது அருந்தலாம் என அன்போடு மணியை சிவக்குமார் அழைத்துள்ளார். இதனையடுத்து, அவரது வீட்டிற்கு மணி சென்றுள்ளார். இருவரும் சேர்ந்து வீட்டில் மது அருந்தியுள்ளனர். அப்போது, தலைக்கேறிய நிலையில் தனது மனைவியுடன் கள்ளக்காதல் குறித்து சிவக்குமாரிடம் மணி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சிவக்குமார் மணியின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க திட்டமிட்ட சிவக்குமார் மணி அதிக அளவில் மது குடித்ததால் போதையில் இருப்பதாக கூறி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மணியை அவருடைய வீட்டில் வைத்துவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும் கணவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த கோவிந்தம்மாள் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே எதுவும் தெரியாதது போல வந்த சிவக்குமார் மணியை அழைத்து கொண்டு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிவக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், மணியை கொலை செய்துவிட்டு சிவக்குமார் நாடகமாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் மனைவிக்கு தொடர்பு இருக்கிறாதா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.