அ.தி.மு.க. இணைய வேண்டும் என்று பா.ஜ.க. மேலிடம் விரும்புகிறது. இதற்காக அண்ணாமலை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸை சந்தத்திருக்கிறார்! ஆனால், ‘நாங்கள் யாரும் பிரியவில்லை… ஒன்றாக இருக்கிறோம்’ என்று அ.தி.மு.க.வின் குரலாக செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் பணிக்குழு கூட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘எடப்பாடி தலைமையில் வெற்றி என்ற இலக்கை கிழக்கு தொகுதி அடையும்போது இந்தியாவே திரும்பி பார்க்க இருக்கிறது. மேலும் அனைவரும் இந்த இயக்கம் பிரிந்து இருக்கிறார் என சொல்கிறார்கள். பிரிந்தவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேடிப்பார்க்கின்ற அளவிற்கு இந்த இயக்கம் இருக்கிறது. நாங்கள் யாரும் பிரியவில்லை ஒன்றாக இணைந்திருக்கிறோம்.

ஒன்றாகவே இணைந்து பணிகளை செய்து வருகிறோம் என்பதற்கு இந்த தேர்தல் களம் அமைந்துள்ளது. தென் மாநிலமான தமிழகத்தில் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இதை எவராலும் தகர்க்க முடியாது. கழகம் எப்படி பணியாற்றுகிறது என்பதை களப்பணிகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னரசு ஒருமனதாக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்’’ இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில்தான் அண்ணா சாமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், ‘‘அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எஃகு கோட்டைப் போல் பாதுகாத்து வருகிறார் எடப்பாடியார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்குப் பிறகு எடப்பாடியார்தான் அ.தி.மு.க.வின் தலைமை. ஓ.பி.எஸ். என்பவருக்கு அ.தி.மு.க.விற்கும் சம்பந்தமே இல்லை’’ என்றவர், அடுத்துக் கூறியதுதான் அதிர்ச்சி ரகம்!

அதாவது, ‘‘வட மாநிலங்களில் பி.ஜே.பி. கூட்டணிக் கட்சிகளை எந்தப்பாடு படுத்துகிறது என்பதை நாட்டு மக்களே அறிந்திருக்கிறார்கள். அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்திற்கு மக்கள் செல்வாக்கு உண்டு. அவர்கள் எங்களுடன் இணைந்தால், அவர்களுக்கும் வெற்றி நிச்சயம். அதைவிட்டுவிட்டு, ‘இணைப்பு’ என்று சொல்லிக்கொண்டு வந்தால் அதற்கு வாய்ப்பே இல்லை. பி.ஜே.பி. வந்தாலும், வராவிட்டாலும் எங்களுக்கு எந்த நஷ்டமும் லாபமும் இல்லை’’ என்று பேசினார்.

ஆக, மொத்தத்தில் பி.ஜே.பி.யை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிட முடிவெடுத்துவிட்டார் என்பதைத்தான் பொன்னையன் சூசகமாக பேசியிருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal