ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களத்தில் இறக்கியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். ஓ-பிஎஸ்ஸோர் பா.ஜ.க.வின் கண் அசைவுக்காக காத்திருக்கிறார்.

அ.தி.மு.க. இரண்டு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாஜக மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளார்களாம். ஒருவேளை இரட்டை இலை சின்னம் 2 அணிகளுக்குமே கிடைக்காமல் முடங்கும் பட்சத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட முடியும். ஆனால் சுயேட்சை சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம், அதிமுக இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில், ‘நடுநிலை’ வகிக்க முடிவு செய்திருப்பதாக 2 நாட்களாகவே தகவல்கள் பரபரத்து வருகின்றன.

எனினும், பாஜகவுக்குள் சில அதிருப்திகள் வெடிக்க துவங்கி உள்ளனவாம். தேர்தலில் போட்டியிடும் எண்ணம், தமிழக மாநில பாஜகவுக்கு குறைவாக உள்ளதாக சொல்கிறார்கள். தேர்தலில் போட்டியிடாமல் போனாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது எடப்பாடி பழனிசாமிக்கே சாதகமாக முடியும் என்று பாஜகவில் உள்ள சில சீனியர்கள் கருதுகிறார்களாம்.. அதுமட்டுமல்ல, தங்களை கலந்தாலோசிக்காமல், வாசனை சந்தித்து பேசி, தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி தனித்து அறிவித்து விட்டதும், பாஜக சீனியர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. அதனால்தான், இடைத்தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்று நினைக்கிறார்களாம்.

கடந்த 2, 3 நாட்களாகவே தொடர் ஆலோசனையில் பாஜக தரப்பு இறங்கிவருகிறது. இன்றும்கூட மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் தரப்பு ஆலோசனை நடத்துகிறது.. எனினும் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில், இப்போது பாஜகவின் அரசியல் கிளைமேட்டே டக்கென மாறி வருகிறது. டெல்லியில் இருந்து நாளை, பாஜக தேசிய பொதுச்செயலர் தருண் சுக் சென்னை வரப்போகிறாராம். கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேச போகிறார். அதன்பிறகு வேட்பாளர் யார் என்பதையும் அவர் அறிவிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 3ம் தேதி வரை சென்னையில் தங்கியிருக்க போகிறாராம் தருண்.. தேர்தல் பணிகள் குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக சொல்கிறார்கள்.. தேர்தலில் பாஜக போட்டியிடுவதில்லை, தேர்தலில் நடுநிலைமை, தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை, என பல்வேறு தகவல்கள் மாறி மாறி கசிந்து கொண்டிருந்த நிலையில், தருண் சுக் சென்னை வருவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஓ.பி.எஸ்.ஸைப் பொறுத்தளவில், ‘எடப்பாடியார் எந்த வேட்பாளரை அறிவித்தாலும் ஆதரவு தரத் தயார்’ என்கிறார். இதனை கு.ப.கிருஷ்ணன் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் கூறிவிட்டார். ஆனால், எடப்பாடி தரப்போத, ‘இவ்வளவு நாள் நாங்கள் பட்ட கஷ்டங்கள் வீணாகிவிடும். நாங்கள் ஒருபோதும் ஓ.பி.எஸ்.ஸை ஏற்றுக்கொள்ள மாட்டோம். சின்னத்திற்காக ஓ.பி.எஸ்.ஸை ஏற்றுக்கொண்டால், அவர் ஒருங்கிணைப்பாளராகிவிடுவார். அவர் அ.தி.மு.க.விலேயே இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் எல்லாம் சுக்கு நூறாகிவிடும்’’ என்றனர்.

நாளை சென்னைக்கு வரும் மேலிடம் தலைவர் சுமூகமாக பஞ்சாயத்தை முடிப்பார். பஞ்சாயத்து சுமூகமாக முடியவில்லை என்றால், ஓ.பி.எஸ். உள்ளிட்ட அணிகளுடன் பா.ஜ.க. தரப்பில் வேட்பாளரை போடவும் பரிசீலித்து வருகிறார்களாம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அண்ணாமலைக்கு ஒரு டெஸ்ட்தானோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal