ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் இரு அணிகளாக செயல்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒரு வேட்பாளரை நிறுத்துகிறது. இதேபோல் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களை இரு அணியினரும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். இதில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 29ம் தேதி இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த இடையீட்டு மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவுக்கு ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த பதில் மனுவில், “அங்கீகரிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை சேர்க்க கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுக்குழு விவகாரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்வதையும் ஏற்க முடியாது. ஈ.பி.எஸ்யின் இடையீட்டு மனு நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பிரதிநிதி என்ற அடிப்படையில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை. அதனால், எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கும் என்பது உறுதியாகிவிட்டது?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal