‘உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதாக’ பாரளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதன் முறையாக உரையாற்றியிருக்கிறார்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக்கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்து வருகிறது.
இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:
- கொரோனா காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டங்கள் அனைவரையும் சென்றடைகின்றன.
- ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள்.
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் மற்றும் மக்கள் மருந்தகம் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.
- டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமே இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது
- பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது. அரசு துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது. ஊழலை ஒழிக்க பினாமி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது
- பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏழைகளை காப்பாற்றும் அதே வேளையில் நவீனத்துவமும் கடைபிடிக்கப்படுகிறது. இரு முறை இந்த அரசை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு நன்றி.
- அரசு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.
- பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளோம்.
- விளையாட்டு துறையில் திறமையானவர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது.
- உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.