அ.தி.மு.க. வேட்பாளரை வருகிற 3-ந்தேதி எடப்பாடி தரப்பு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் ஈரோட்டில் 2 நாட்கள் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல் நாள்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். சுமார் 8 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து 2-வது நாள் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வீடு வீடாக சென்று தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து அ.தி.மு.க.வினர் கடந்த 3 நாட்களாக வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர்.
பகுதி வாரியாக இந்த பணிகளை தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். 3 நாட்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி முடிவடைந்ததையடுத்து வார்டு வாரியாக ஆலோசனை செய்ய எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்துக்கு வந்து களம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், உதயகுமார், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. கருப்பணன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் இரட்டை இலை சின்னம், வேட்பாளர் அறிவிப்பு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார். இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 12 மணி வரை சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.
இந்த ஆலோசனை கூட்டம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம், ‘‘- இரட்டை இலை சின்னம் தொடர்பாக 3 நாளில் தேர்தல் ஆணையம், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை மாலையில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படலாம். மேலும் இந்த கூட்டத்தில் தொகுதியின் களநிலவரம், மக்களின் மன நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் பூத் கமிட்டியினர் செயல்பாடு, பிரசார யுக்திகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. இந்த தேர்தலில் கே.வி.ராமலிங்கம் போட்டியிட மறுத்தது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது’’ என்றனர்.
எனவே, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.எஸ்.தென்னரசு, மாணவர் அணி மாவட்ட இணை செயலாளர் நந்தகோபால் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.