‘என்ன பாவம் செய்தார்களோ… தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சர்களிடம் அடிவாங்கியே அவமானப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனை தலைவர் தட்டிக் கேட்க மாட்டாரே?’ என ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் மனதுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்!

திமுக அரசு பதவியேற்றதில் இருந்து அமைச்சர்களின் செயல்பாடுகள் முதலமைச்சரை அதிர்ச்சி அடையவைத்து வருகிறது. பேருந்தில் பெண்களுக்கான இலவச பயணத்தை ஓசி பயணம் எனக்கூறி அமைச்சர் பொன்முடிய பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆரிடம் மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் அமைச்சர் தாக்கியதும் தமிழக மக்களை விமர்சிக்க வைத்தது.

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மனுஸ்ருதி தொடர்பான சர்ச்சை பேச்சும் எதிர்கட்சிகளுக்கு விருந்தாக அமைந்தது. இதன் அடுத்த கட்டம் தான் திமுக நிர்வாகிகளை கல்லால் அமைச்சர் நாசர் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அந்த வீடியோ பரவி அமைச்சருக்கு எதிரான கண்டனங்களை உருவாக்கியது. மற்றொரு அமைச்சரான கே.என்.நேருவோ திருச்சியில் நடைபெற்ற விழாவில் நீர் நிரம்பிய குடங்களை வேகமாக எடுத்துக் கொடுக்காததால் திமுக கவுன்சிலரின் பின்னந்தலையில் கையால் தட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வைரலானது. இதனை பாஜக மற்றும் அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

இது போன்ற செயல்களால் முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டத்தை ஏற்கனவே பதிவு செய்து வருகிறார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், என் முகத்தை பார்த்தாலே தெரியும், கட்சினர் சிலரது செயலால் தூக்கமின்றி தவிக்கிறேன். என்னை தூங்க விடாமல் செய்கிறார்கள். துன்பப்படுத்துவது போல் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது என்று முதல்வர் ஸ்டாலின் புலம்பினார். முதலமைச்சரின் இந்த பேச்சு திமுகவினரை அதிர்ச்சி அடையவைத்தது. இருந்த போதும் திமுக அமைச்சர்களின் இது பொன்ற செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சேலத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த உதயநிதிக்கு நேற்று இரவு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் பஸ் நிலைய பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் கே.என்நேரு, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் மேளதாளத்துடன் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள் வெள்ளி செங்கோலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கினர். ஒரே நேரத்தில் ஏராளமான தொண்டர்கள் அந்த இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது தொண்டார் ஒருவர் உதயநிதிக்கு சால்வை அணிவிக்க முயன்றார். அவரை தலையில் அடித்து அமைச்சர் கே.என்.நேரு வெளியேற்றினார். இதே போல அங்கிருந்த தொண்டர்களை வேகமாக செல்லும் படி அதட்டியும் அடி கொடுத்தும் அனுப்பிவைத்தார். இதனை அங்கிருந்த பார்த்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் சிகமணி மீடியாக்கள் வீடியோ எடுக்கிறாங்கனு நினைவுபடுத்தினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.

பத்து ஆண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது, நாங்கள் அடிவாங்கதானோ..? என குமுறிக்கொண்டிருக்கிறார்கள் உடன் பிறப்புக்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal