நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தின விழாவிற்கு வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து முப்படை வீரர்கள், காவல்துறை சிறப்பு படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்றது. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அலங்கார ஊர்தி வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

காவல்துறையினரின் அணிவகுப்பு ஊர்தி வரும் போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற போது கூறிய வாசகம் ஒலித்தது. காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகளை முதல்வர் ஸ்டாலின் பேசியது வீடியோவாக ஒளிபரப்பானது.

ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையினர் அலங்கார ஊர்தி அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மலைவாழ் மக்களின் வீடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகம் முதன்மையாக இருந்தது. தமிழ்நாடு என்ற கோலமும் வரையப்பட்டிருந்தது. அப்போது ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் ஸ்டாலினும் அமர்ந்திருந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழகம் தமிழ்நாடு என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆளுநர் தமிழ்நாடு அரசு இடையேயான போர் ஓய்ந்த நிலையில் இன்றைய தினம் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகம் முதன்மையாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal