ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்துவிட்டு தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. ‘தேர்தல் மன்னன்’ செந்தில் பாலாஜி ‘விட்டமின்’ மாத்திரைகளை கிழக்கு தொகுதியில் இறக்கிவிட்டார்!

அ.தி.மு.க.வின் கோட்டை எனப்படும் கொங்குமண்டலத்தில் அடங்கியுள்ள ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் தயங்குவதாக தற்போது தகவல்கள் கசிகிறது.

ஏன் இந்த தயக்கம் என்று மூத்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம்.

‘சார், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியில் ஒன்று பேசுகிறார். உள்ளுக்குள் ஒன்று செய்கிறார். அ.தி.மு.க.தான் பெரிய இயக்கம், அக்கட்சியுடன்தான் கூட்டணி என்று சொல்லிவிட்டு, டெல்லிக்கு ஆள் அனுப்பி பா.ஜ.க. போட்டியிட்டு பலத்தை காட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

இவருக்கு இப்படியொரு துணிச்சல் வருவதற்கு காரணமே ஓ.பி.எஸ்.தான். ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.விற்கு எதிரான நிலைப்பாட்டை ஓ.பி.எஸ். எடுத்து வருகிறார். நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தார் ஓ-பிஎஸ்! அ.தி.மு.க. ஆட்சி கலைவதற்கு அப்போதே பா.ஜ.க.வுடன் கைகோர்த்தார். தற்போது, அ.தி.மு.க.வில் செல்வாக்கு இல்லாவிட்டாலும், அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை ஒரு சில நிர்வாகிகளை வைத்துக்கொண்டு பா.ஜ.க.வில் அடகு வைக்க காத்திருக்கிறார்!

தற்போது, ஏ.சி.சண்முகம், தனியரசு உள்ளிட்டோர் ஓ-பிஎஸ்ஸுக்கு ஆதரவளித்ததன் பின்னணியிலும் பா.ஜ.க.தான் இருக்கிறது. ஓ-பிஎஸ்ஸை வைத்து விளையாடும் பா.ஜ.க., அதே ஓ.பி.எஸ்.ஸாலேயே தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜீரோவாகிவிடும்’’ என்று கொந்தளித்தனர்!

எத்தனை நாளைக்குதான் விளையாட முடியும்… விளையாட்டிற்கும் ஒரு முடிவு இருக்கிறதுதானே..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal