னியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தாலோ… விதி மீறல்களில் ஈடுபட்டாலோ… கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்!
தொழில் முனைவோர் அமைப்பு மற்றும் பன்னாட்டு தனியார் கல்வி நிறுவனம் இணைந்து , பள்ளி மாணவர்களுக்கான புதிய சிந்தனையை தூண்டும் வகையில் நடத்திய அறிவியல் போட்டியில், முதல் 30 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு விவரங்களை பதிவேற்றும் நிதித்துறையின் வலைதளத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்தவர், தற்போது சரி செய்யப்பட்ட நிலையில் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல் சம்பளம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஒரு பள்ளியில் தேவைக்கு அதிகமாக உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களை மட்டுமே, அரசு தொழிற்பயிற்சி மைய (ஐடிஐ) ஆசிரியர்களாக பணி மாற்றப்பட்டு வருவதாகவும், கூடுதல் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் இருந்து மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இலவச மடிக்கணினி திட்டத்தில் இதுவரை 11 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டியுள்ளது. மடிக்கணினிகளுக்கு தேவையான சிப் தற்போது சந்தையில் தேவையான அளவில் இல்லை என்பதால், வழங்க இயலவில்லை. விரைவில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்தார்.
கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்ககூடாது என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் விதியை மீறி கட்டணம் வசூலித்தாலோ, அல்லது கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ அரசிற்கு தகவல் தெரிவிக்கலாம். விதிமீறல் ஈடுபடும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.