சமீபத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘பாத்ரூம்… பெட்ரூமைத் தவிர அனைத்து பொது இடங்களாகவிட்டது. எனவே, நிர்வாகிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் மொபைல் போன் மூன்றாவது கண்ணாக இருக்கிறது’ என்று அறிவுரை வழங்கினார்.

அந்த அறிவுரை அமைச்சர்களுக்கு பொருந்தாதோ என்னவோ… தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக தொண்டர் ஒருவரை கல்லைக் கொண்டு அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூரில் நாளை மொழிப்போர் தியாகிகள் தொடர்பாக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர்., அருகில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , விழா ஏற்பாடுகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து தான் அமருவதற்காக இருக்கை எடுத்து வருமாறு திமுக நிர்வாகி ஒருவரிடம் கூறியுள்ளார். ஆனால் திமுக நிர்வாகி தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரே ஒரு நாற்காலி மட்டுமே எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர், அவரை கடுமையாக திட்டியதோடு, கீழே கிடந்த கல்லை எடுத்து அவரை நோக்கி வீசினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal