ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தி.மு.க. முக்கிய அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறது. அதே போல், அ.தி.மு.க. ஐ.டி.விங்கும் சில வியூகங்களை வகுத்து களத்தில் இறங்க தயாராகி வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியவர் ராஜ் சத்தியன். இவர், மதுரை மாவட்டச் செயலாளரும், அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வின் மகன். இவர் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவில் மண்டல செயலாளராக இருந்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் அதிதீவிர பற்றாளரான ராஜ் சத்தியன் தலைமையிலான ஐ.டி. விங், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் புதிய வியூகங்களை வகுத்து களத்தில் இறங்க ஆயத்தமாகி வருகிறதாம்.
இது பற்றி அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது, ‘‘சார், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் பாதியைக் கூட நிறைவேற்ற வில்லை. இன்னும் சொல்லப் போனால் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் என்பதுதான், தேர்தல் வாக்குறுதிகளிலேயே முக்கியத்துவம் வாய்ந்தது. அதே போல், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்கள் அதுவும் நடக்கவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின், ‘கூட்டுறவு வங்கிகளில் உடனடியாக சென்று ஐந்து பவுன் நகையை அடமானம் வையுங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த கடனை தள்ளுபடி செய்துவிடுவோம்’ என்றார்! இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் தள்ளுபடி செய்யவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார் அப்போதை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.
நகைகளை அடமானம் வைத்தவர்களில் பாதிக்கு பாதி பேருக்குக் கூட தள்ளுபடி செய்யவில்லை. அதேபோல், மகளிருக்கு இலவச பேருந்து கட்டணத்தை அறிவித்தார்கள். அந்த பேருந்து எப்போது வருகிறது என்றே சொல்ல முடியவில்லை. அதுவும் ஒரு சில ஊர்களில் ஒரு நாளைக்கு இரண்டுமுறைதான் ‘இலவச பேருந்து’ வருகிறது.
தி.மு.க. அரசு செய்யத்தவறிய… கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியவற்றை புள்ளி விபரங்களுடன் எடுத்திருக்கிறார். இதனை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அனைவருக்கும் சென்று சேரும் படியான திட்டங்களை வைத்திருக்கிறோம். படித்த இளைஞர்களிடம் தி.மு.க.வின் ஏமாற்று வித்தகைளை மொபைல் போன் மூலம் வாட்ஸப், ஃபேஸ் புக் மற்றும் வலைதளங்கள் மூலம் கொண்டு சேர்க்க இருக்கிறோம்.
எடப்பாடியார் செய்த சாதனைகளைச் சொல்லி ‘ஈரோடு கிழக்கு எங்களுடைய இலக்கு’ என்ற சாதனையை நிறைவேற்றிக் காட்டுவோம்’’ என்றனர்!
தி.மு.க. ஐ.டி. விங் என்ன செய்யப் போகிறார்களோ..?