ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். வேட்பாளரை அறிவிக்க இருக்கிறார். இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோர இருக்கிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!

ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கும் நிலையில் அதிமுக இரண்டு பிரிவாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியினர் தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்திய நிலையில், நேற்று ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்களைக் கூட்டி ஆலோசித்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்தார்.

அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒன்றிணைத்து ஒரே அதிமுக வேட்பாளராக போட்டியிட வைக்க பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயன்ற நிலையில், அந்த முயற்சி பலிக்கவில்லை. இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ், அங்கு முக்கிய பாஜக தலைவர்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தமிழ்நாடு திரும்பிய ஓபிஎஸ், நேற்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, மருது அழகுராஜ், தர்மர் எம்.பி மற்றும் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் பலரும், எடப்பாடி பழனிசாமி தரப்பு, இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்த பின்னர் தான் நாம் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொதுமக்களின் ஆதரவு பெற்ற செல்வாக்கு மிக்க நபரை நமது அணி சார்பில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், ஈபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகே நமது அணி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படுவதற்காக இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு கிழக்கில் ஓ.பி.எஸ். அணியினர் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணனின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டைதான். அதற்கு எடப்பாடி பழனிசாமி காரணமில்லை. மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாதான். இவர்கள் மீது கொங்கு மக்கள் தனிப் பாசம் வைத்துள்ளனர். அதே போல், மேற்கு மண்டலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த ஈரோட்டை, இன்றைக்கு கே.சி.கருப்பண்ணன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரின் கோஷ்டி அரசியலால், தோப்பு வெங்கடாச்சலம், சிந்து ரவிச்சந்திரன், என்.ஆர்.கோவிந்தராஜ், வி.கே.சின்னசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தி.மு.க. பக்கம் சென்று விட்டனர்.

தி.மு.க.விலும் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. எனவே, ஓ.பி.எஸ். வேட்பாளரை அறிவித்தவுடன், அ.தி.மு.க.வில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை சந்திக்க இருக்கிறார் அண்ணன் கு.ப.கிருஷ்ணன். எடப்பாடியால் ஈரோடு அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது. எனவே, அண்ணன் கு.ப.கி. தலைமையில் அனைவரும் எங்கள் தலைவர் ஓ.பி.எஸ். அறிவிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். எனவே, எங்கள் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார்!’’ என்று ஒரே போடாக போட்டனர்!

ஆக மொத்தத்தில், தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டாவது இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற போட்டிதான் ஈரோடு கிழக்கில் தற்போது நிலவி வருகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal