ஓ.பி.எஸ்.ஸின் அரசியல் எதிர்காலம் பா.ஜ.க. கையில் இருக்கிறது. கை கொடுத்து தூக்கிவிடுமா… கை கழுவிவிடுமா என்பதைத்தான் அரசியல் பார்வையாளர்கள் உற்றுநோக்கி வருகிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தளவில் துணிச்சலுடன் களத்தில் இறங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஓ-.பி.எஸ்., ‘பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம்… இல்லாவிட்டால் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம்’ என்று அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக இன்னும் வேட்பாளரை நிறுத்தவில்லை. மாறாக அதிமுகதான் பெரிய கட்சி. கூட்டணி இருக்கும் பெரிய கட்சி அவர்கள்தான். அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதிமுகவிற்கு ஏற்கனவே ஈரோட்டில் இருந்து அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். இது தொடர்பாக முடிவு எடுப்போம் என்று அண்ணாமலை சூசமாக தெரிவித்துள்ளார். அதாவது ஈரோடு கிழக்கில் அதிமுகவிற்கு ஆதரவு கொடுப்போம் என்று அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். அவரின் இந்த பேச்சால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.

அதிமுகவிற்கு பாஜக ஆதரவு கொடுக்கும் என்ற பட்சத்தில் எடப்பாடி அணிக்கு கொடுக்குமா? ஓபிஎஸ் அணிக்கு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் டெல்லி சப்போர்ட் காரணமாக சின்னம் முடங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இது ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக முடியும். ஆனால் அதே பாஜக எடப்பாடி அணிக்கு சப்போர்ட் செய்தால் சின்னம் எடப்பாடி அணிக்கு செல்ல அதிக சான்ஸ் உள்ளது. ஏனென்றால் எடப்பாடிக்குத்தான் அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. அதேபோல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.

இதனால் எடப்பாடி பக்கம் பாஜக செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி மட்டும் சென்றால் அது ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய சிக்கலை கொடுக்கும். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் என்னும் “சுழலில்” ஓ பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட வசமாக சிக்கிக்கொண்டதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பாஜகவின் ஒற்றை நிலைபாட்டில் ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் ஊசல் ஆடிக்கொண்டு இருக்கிறது. பாஜக மட்டும் எடப்பாடியை ஆதரிக்க முடிவு செய்துவிட்டால் அவரின் மொத்த அரசியல் எதிர்காலமும் சிக்கலுக்கு உள்ளாகும்

இந்த தேர்தலில் பாஜகவும் போட்டியியிடும் என்று எதிர்பார்த்து நம்பிக்கையாக இருந்த ஓபிஎஸ் தற்போது பாஜகவின் நிலைப்பட்டால் தனது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal