ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட பா.ஜ.க. (குழு அமைத்து), நாம் தமிழர் கட்சி என அனைத்து கட்சியினரும் விறுவிறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், முன்பு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாச்சலம் மௌனம் காத்து வருகிறார்!

அ.தி.மு.க.வின் பலம்… பலவீனம்… தி.மு.க.வின் பலம்… பலவீனம்… குறித்து அங்குள்ள நடுநிலையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் ஈரோட்டில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. அப்போது மாவட்டச் செயலாளராக இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. 8 தொகுதிகளையும் கைப்பற்றியது, அப்போது அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம்.

2016 சட்டமன்றத் தேர்தலின் போது, தோப்பு வெங்கடாச்சலத்தின் தொகுதியான பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தோப்பு வெங்கடாச்சலத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார் ஜெயலலிதா… அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற தோப்பு வெங்கடாச்சலம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் ஈரோடு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர்தான், அவர் தான் தோப்பு!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோட்டிக்கு கருப்பண்ணன் மற்றும் செங்கோட்டையன் என இரு அமைச்சர்கள் இருந்தும், 4 தொகுதிகளை கோட்டை விட்டது அ.தி.மு.க.! அதற்கு காரணம் உட்கட்சிப் பூசல்…

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு, தி.மு.க.வில் இணைந்தார் தோப்பு வெங்கடாச்சலம். அதே போல் முன்னாள் எம்.பி. என்.ஆர்.கோவிந்தராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.சின்னசாமி, அந்தியூர் கிருஷ்ணன், வாரிய தலைவராக இருந்த சிந்து ரவிச்சந்திரன், டி.மணிமேகலை, கணேசன், வழக்கறிஞர் பிரிவு மா.செ., செந்தில் குமார், இளைஞரணி மா.செ. ரமேஷ், அம்மாபேட்டை யூனியன் சேர்மன், ஒன்றிய செயலாளர் சரவண பவா, கோபி ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன், டி.என்.பாளையம் ஒ.செ. மனோகரன், சத்தியமங்கலம் ஒ.செ. வரதராஜ், மாவட்ட கவுன்சிலர் பாலகிருஷ்ணன் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கியமான நிர்வாகிகள் தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட்டனர்.

அ.தி.மு.க. வெற்றிபெற, வியூகங்களை சரியான முறையில் வகுக்கக் கூடிய முக்கிய புள்ளிகள் அனைவரும் தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட்டனர். காரணம், ஈரோட்டில் நிலவிய கோஷ்டி பூசல்தான். இன்றைக்கு ஈரோடு அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருக்கிறது.

இந்த நிலையில்தான் ஈரோடு இடைத்தேர்தலை மிகுந்த பலத்துடன் சந்திக்கிறது தி.மு.க… ஆனால், பலத்தை இழந்த நிலையில்தான் அ.தி.மு.க. சந்திக்கிறது. எனினும் தி.மு.க.வில் இணைந்த தோப்பு வெங்கடாச்சலம் சமீப காலமாக மௌனமாக ஒதுங்கியிருப்பதுதான் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
தி.மு.க.வின் பலவீனம் என்றால், அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு உரிய முக்கியத்தும் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுதிகிறது. அதை மட்டும் சரி செய்தால், ஈரோடு தி.மு.க.வின் கோட்டையாக மாறிவிடும்’’ என்றனர்.

இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமாக மாநில அளவிலான முக்கிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தோப்பு வெங்கடாச்சலத்திடம் பேசியிருக்கிறார். இது தொடர்பாக பழனியப்பன் தோப்புவை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருக்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜியும் தோப்பு வெங்கடாச்சலத்திடம் அலைபேசியில் பேசியிருக்கிறார். ஆனால், தோப்பு வெங்கடாச்சலம் மாநில அளவிலான பொறுப்பை ஏற்காதது ஏனோ என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்

விரைவில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்… மீண்டும் அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்! ‘தோப்பு’வின் முடிவு என்னவோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal