தமிழகத்தில் ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பாக இருக்கும் சமயத்தில், சத்தமே இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக திருச்சி புறநகரில் சமீபத்தில் ‘கிடா கறி’ விருந்து தடபுடலாக அரங்கேறியிருக்கிறது!
பெரம்பலூர் தொகுதியில் இந்தமுறை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில்தான் நடந்து முடிந்த அவரது பிறந்த நாளை, பிரம்மாண்டமாக கொண்டாடி அசத்தியிருந்தார்கள் உடன் பிறப்புக்கள்!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொல்லிமலை அடிவாரத்தில் இயற்கை எழில்கொஞ்சம் புளியஞ்சோலை அமைந்துள்ளது. கொல்லி மலையிலிருந்து வரும் நீர் வீழ்ச்சி புளியஞ்சோலையில் தவழ்ந்து செல்லும். இது ஒரு சுற்றுலாத்தலமாகும்! கொல்லிமலை அடிவாரம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், துறையூர் அருகேதான் அமைந்திருக்கிறது புளியஞ்சோலை!
கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியஞ்சோலையில் ‘கிடா’ விருந்து வைத்து உடன் பிறப்புக்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார் அருண் நேரு! சம்பந்தமே இல்லாமல் இப்போது எதற்கு கிடா கறி விருந்து என்று மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் அருண் நேரு போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தொகுதி பெரும்பலூர் என்றாலும், திருச்சி புறநகர் பகுதிகள்தான் இதில் அதிகம் அடங்கும். வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடிய வாக்குகள் திருச்சி புறநகர் பகுதிகளான துறையூர், முசிறி, மண்ணச்ச நல்லூர், உப்பிலியபுரம், தா.பேட்டை போன்ற பகுதிகள்தான்.
திருச்சி மாநகரிலேயே நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த அருண் நேரு, வரும் நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதால், புளியஞ்சோலையில் ‘கிடா கறி’ விருந்து கொடுத்திருக்கிறார். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு அங்கேயே அமர்ந்து சாப்பிட்டும், வீட்டுக்கு பார்சலை கட்டிக்கொண்டும் சென்றனர்’’ என்றவர்கள், அடுத்து சொன்னதுதான் அதிர்ச்சி ரகம், ‘கே.என்.நேருவின் மகன் போட்டியிடுவதை முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த தற்போது பொறுப்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளே விரும்பவில்லை.
காரணம், கடந்த காலங்களில் கே.என்.நேருவால் வீழ்த்தப்பட்ட முத்தரையர் பிரமுகர்கள் ஏராளம். அதை மனதில் வைத்து அருண் நேரு போட்டியிடுவதை பதவியில் இருக்கும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரே முகம் சுளிக்கிறார்கள். இருந்தாலும், பதவியை காப்பாற்றிக் கொள்ள, கே.என்.நேருவுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார்களே தவிர, மனசாட்சிப்படி அவருக்கு யாரும் உண்மையாக இல்லை என்பதை பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவு உணர்த்தும்’’ என்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..?