வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்புதான் அ.தி.மு.க.வின் நிலை பற்றி தெரியும் என்று பலரும் கணித்திருந்தனர். ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அ.தி.மு.க.வின் எதிர்காலம்… எடப்பாடி பழனிசாமியின் வியூகம்… என அனைத்தையும் ‘க்ளைமாக்ஸிற்கு’ கொண்டு வர இருக்கிறது.

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான அ.தி.மு.க. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு உடைந்தது. பிறகு இணைந்தது… மறுபடியும் உடைந்தது… இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வில் 95 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சில தலைவர்களை வைத்துக் கொண்டு, நீதிமன்றம் மூலமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்! இதனால் தொண்டர்கள் தான் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், மாபெரும் இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் முதலில் ஜி.கே.வாசனை சென்று சந்தித்தனர். அதன் பிறகு ஓ-பிஎஸ் ஆதரவாளர்களும் ஜி.கே.வாசனை சந்தித்தனர். இதில் ஒன்றும் தவறில்லை. மூப்பனார் எப்படியோ அதுபோலத்தான் ஐயா ஜி.கே.வாசனும் இன்றுவரை ‘கரை’படியாமல் கட்சியை வழி நடத்திக்கொண்டிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியை அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்.

ஆனால், நேற்றைய தினம் அ.தி.மு.க.வினரும், ஓ.பி.எஸ் அணியினரும் பி.ஜே.பி. அலுவலகத்திற்கு அடுத்தடுத்து சென்றதுதான் அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. மத்தியில் பிஜேபி ஆண்டாலும், தமிழகத்தைப் பொறுத்தளவிற்கு ‘நோட்டா’வுடன் போட்டிப் போடும் கட்சிதான். அப்படிப்பட்ட கட்சியை வழியச் சென்று இருவரும் ஆதரவு கேட்டிருப்பதுதான், அ.தி.மு.க.வினரைத்தாண்டி, பலரையும் ஏன் தி.மு.க.வினரைக் கூட முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

காரணம், அ.தி.மு.க.வின் குடுமிப்பிடி பி.ஜே.பி.யிடம் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பாக இருதரப்பில் ஒருவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், இரட்டை இலை எனும் ‘லகான்’ தேர்தல் ஆணையத்தின் கைகளில் இருக்கிறது. இந்த தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால்தான் இருவரும் மாறி மாறி சென்று பார்த்தனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியை வைத்து பா.ஜ.க. ஒரு கணக்குப் போடுகிறது. அதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை கழற்றிவிட்டுவிட்டு, ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா, பா.ம.க. என சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் என்ன? அதற்கு ஈரோடு கிழக்கை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டால் என்ன? என்பதுதான் அந்த கணக்கு..!

பா.ஜ.க.வின் கணக்கு மற்றும் எடப்பாடியின் சக்கர வியூகம் பற்றியும் தற்போது பார்ப்போம்…!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என்று ஓ.பி.எஸ். ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில்தான் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசியலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குறிப்பாக தற்போது இந்த இடைத்தேர்தலில் ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பொது வேட்பாளராக தேசிய கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக வேட்பாளரை நிறுத்தினால் அதனை புதிய நீதிகட்சி வரவேற்கும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்’’ என புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஜான்பாண்டியனும், ‘அ.தி.மு.க.வினர் இணைந்து போட்டியிட்டால் உங்களுக்கு ஆதரவு கொடுப்பேன்’ என்று அறிவித்திருக்கிறார். இப்படி இவர்கள் எல்லோரும் அறிவிப்பதற்கு பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறது. அதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலை சின்னம் உறுதியாக முடங்கி விடும். இந்த நிலையில் ஓ-பிஎஸ், டி.டி.வி., சசிகலா, ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்பட சில கட்சிகளின் ஆதரவோடு பா.ஜ.க. வேட்பாளரை களமிறக்கினால் என்ன? என்று கணக்குப் போடுகிறதாம். அந்த கணக்குப் படி பார்த்தால் ஜி.கே.வாசனும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார். இதனால்தான், இன்னும் வெளிப்படையாக எடப்பாடிக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவு என்று அறிவிக்கவில்லை பா.ஜ.க.!

அப்படி எடப்பாடிக்கு ஆதரவு என்று அறிவித்தால், ஓ.பி.எஸ். கோபித்துக் கொள்வாரே… அவரை வைத்துதானே அரசியல் செய்து கொண்டிருக்கிறோம் என்று கணக்குப் போடுகிறது பா.ஜ.க..

பி.ஜே.பி.யின் ‘அரசியல்’ கணக்குப் பற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், எதற்கும் துணிந்தவர் அம்மா (ஜெயலலிதா)… அந்த பாணியில்தான் எடப்பாடி ஐயாவும் கட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். எங்களுக்கு சின்னம் ஒரு விஷயமில்லை. அந்த காலங்களில்தான் மக்களிடையே சின்னம் போய்ச் சேராது. தற்போது, விஞ்ஞான உலகத்தில் சின்னம் ஒரு பொருட்டல்ல. எந்த சின்னத்தை கொடுத்தாலும், எடப்பாடியார் வேட்பாளரை களத்தில் இறக்கி வெற்றி பெற வைப்பார். காரணம், கொங்கு மண்டலத்திற்கு அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகள் ஏராளாம்.

பி.ஜே.பி.யின் கணக்கும் எங்களுக்கு தெரியும். பி.ஜே.பி.யே எங்களை விட்டுப் போனாலும் எங்களுக்கு நல்லதுதான்.நாங்கள் அவர்களிடம் இருந்து விலகிவிட்டோம் என்று அவர்கள் எங்களை குற்றஞ்சாட்ட முடியாது. நாங்கள் வழக்குகளைப் பற்றி கவலைப்பட போவதில்லை. இன்றைக்கு தி.மு.க.வில் அமைச்சர்களாக இருக்கும் மூத்த நிர்வாகிகள் மீது எத்தனை வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது தெரியுமா? ஜெயலலிதா போன்று துணிச்சலுடன் செயல்படக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி. எதற்கும் அஞ்சமாட்டார். கூட்டணி தொடர்பாகக் கூட எடப்பாடி நேரில் போய் பேசவில்லையே? ஜெயலலிதாவைப் போல் சில மூத்த நிர்வாகிகளைத்தானே அனுப்பி வைத்திருக்கிறார்?

பா.ஜ.க. போடும் ‘இடைத்தேர்தல்’ கணக்கு பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு ஆதரவு கொடுத்தாலும் நல்லது… கொடுக்காவிட்டாலும் நல்லது… வருகின்றன நாடாமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டாலும் 25 இடங்களுக்கு மேல் வெல்லும்… தி.மு.க. அரசின் மீது மக்கள் அந்தளவிற்கு வெறுப்பில் இருக்கிறார்கள்… எனவே, அதுவரை காத்திருங்கள்…’’ என்றனர் ஆக்ரோஷமாக?

ஆக, மொத்தத்தில் பா.ஜ.க. போடும் அரசியல் கணக்குகளை எல்லாம் தாண்டி க்ளைமாக்ஸை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal