‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் 24 X 7 என்ற சாதனையை படைத்திருக்கிறது. அந்த சாதனையை படைத்தவர் சாராய அமைச்சர்’ என்று விளாசித் தள்ளியிருக்கிறார் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

‘ஈரோடு கிழக்கு எங்கள் இலக்கு’ என்ற ஹேஸ்டேக்குடன் களத்தில் இறங்கியிருக்கிறது எடப்பாடி டீம். இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளிடம் பேசினார் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவர் பேசும்போது,

‘‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆகிறது. இன்று வரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் மருத்துவமனைகள் தான் 24 X 7 என்ற ரீதியில் செயல்படும். ஆனால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 24 X 7 என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த சாதனையை படைத்தவர் ‘சாராய’ அமைச்சர் வி.செந்தில் பாலாஜி!

தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. ஆனால், கரூர் மாவட்டத்தில் அன்று அனைத்து பார்களிலும் சரக்கு கிடைத்தது (கரூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதிலும் கிடைத்தது). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் வந்திருந்த ஸ்டாலின், ‘ஆள் கடத்துபவர்…. ஊழல் பேர்வழி….’ என்றெல்லாம் செந்தில்பாலாஜியை குற்றம்சாட்டினார்.

ஆனால், இன்றைக்கு தி.மு.க.வில் உள்ள சீனியர்களுக்கு கிடைக்காத மரியாதை செந்தில் பாலாஜிக்கு கிடைக்கிறது. எனவே, தமிழ் நாட்டில் நடப்பதை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் எடப்பாடியார் செய்த சாதனைகளை சொல்லி, ஈரோட்டில் வாக்கு கேட்போம்… வெற்றி பெறுவோம்’’ என்றார் ஆக்ரோஷத்துடன்.

சபாஷ் சரியான போட்டி…!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal