‘தங்களின் சுயநலத்திற்காக பா.ஜ.க.விடம் அன்று ஆட்சியை அடகு வைத்தார்கள்; இன்று கட்சியையே அடகு வைத்துவிட்டார்கள்’ என்று அ.தி.மு.க.வை கடுமையாக சாடியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

திமுக பொதுச்செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். இவரது நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை போரூரில் நடந்த பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘அன்று சிலர் பதவியில் இருக்கவும் தங்கள் சுயநலத்திற்காக அன்று ஆட்சியையே ஒட்டுமொத்தமாக எடுத்துச் சென்று அடகு வைத்தவர்கள். இன்று அவர்களே ஒட்டுமொத்தமாக தங்கள் கட்சியையும் அடகு வைத்துள்ளனர்.

தமிழ்நாடு நலனுக்கும் இங்கு வசிக்கும் மக்களின் நலனுக்காகவும் யார் செயல்படுகிறார் என்பதை ஆளுநரே வெளிக்காட்டியுள்ளார். இதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆளுநர் விவகாரத்தில் முதலில் கொதித்தெழுந்தது முதலமைச்சர் ஸ்டாலின் தான். அப்போதே சபையில் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது ஆளுநர் சட்டசபையில் இருந்து கோபித்துக் கொண்டு சென்றார். ஆளுநர் கோபித்துக் கொள்வார் என்பதற்காக அதற்கு முன்னரே இருவர் வெளியே சென்றதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கருணாநிதியும் பேராசிரியர் அன்பழகனும் தான் நட்புக்கு உதாரணம். கருணாநிதி பெரிதும் மதித்த பேராசிரியர் மீது மிகப் பெரிய அளவில் பற்றும் பாசமும் கொண்டவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். நான் கடந்த 2019இல் இளைஞரணி செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன், முதலில் நேரில் சென்று வாழ்த்து பெற்றது பேராசிரியரிடம் தான்.

அதேபோல கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பேராசிரியரின் பேரனுக்காக நானே சென்று நேரடியாக வாக்கு சேகரித்தேன். மாநிலத்தில் திமுக வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். திமுக தலைவர் உத்தரவின்படி மாநிலம் முழுக்க பாசறை கூட்டம் நடத்தி முடித்துள்ளோம். இதற்காக முதல்வர் ஸ்டாலின் நம்மைப் பாராட்டியுள்ளார்.

மத்தியில் நடைபெற்று வரும் பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை. கடந்த 9 ஆண்டு ஆட்சியில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, பாசிசத்தை ஊக்குவிப்பது உள்ளிட்ட செயல்கள் தான் நடந்து வருகிறது. இப்போது நடப்பது இறுதி கூட்டம் இல்லை. இதுதான் அடுத்து நடக்கும் மக்களவை தேர்தலுக்கான முதல் கூட்டம். மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாகக் கருதி நாம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பணியாற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்ற வேண்டும்’’ என்று அவர் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை தி.மு.க.வினர் மட்டுமின்றி உண்மையான ரத்தத்தின் ரத்தங்களும் வரவேற்றதுதான் ஆச்சர்யமளிக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal