காதலிக்கு வேறு ஒருவடன் நிச்சயம் செய்ததால், மனமுடைந்த காதலன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் (வயது 30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். அங்கு பண்ருட்டி அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் பணி செய்து வந்தார். இவர்கள் 2 பேரும் கடந்த 3 வருடங்களாக காதலித்தனர். தற்போது அந்த பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் வேறொரு நபருடன் திருமண நிச்சயம் செய்தனர்.

இதனை அறிந்த நரேஷ் அந்த பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்தது. இதையடுத்து பணி செய்த அலுவலகத்தில் இருந்து அந்தப் பெண்ணின் விலாசத்தை நரேஷ் வாங்கினார். உடனே நரேஷ் அந்தப் பெண்ணின் ஊருக்கு சென்று நேரடியாக பேசி அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ள நரேஷ் தீர்மானித்தார். இதையடுத்து எடப்பாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சேந்தமங்கலம் வந்தார். அப்போது நரேஷ் அந்த பெண்ணை நேரடியாக அழைத்து பேசினார். நாம் திருமணம்செய்து கொள்வோம் என்று கூறினார்.

ஆனால் அந்த இளம்பெண் நரேசுடன் செல்ல மறுத்துவிட்டு பெற்றோர்கள் நிச்சயம் செய்தவரைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். இதனால் மனமுடைந்த நரேஷ் நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று காதலித்த பெண்ணை மிரட்டினார். ஆனாலும் அந்த பெண் எனது பெற்றோர்கள் நிச்சயித்த வாலிபரைத் தான் திருமணம் செய்து கொள்வேன். நீ ஊருக்கு திரும்பி சென்று விடு என்று கூறிவிட்டு சென்றார்.

இதனால் மனமுடைந்த நரேஷ், பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கினார் . பின்னர் வீரப்பெருமாநல்லூர் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டு தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் மீது தீ பற்றியது. இதனால் நரேஷ் வேதனையால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு சாலை பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடல் கருகிய நரேஷை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நரேஷ் இறந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal