அதிமுகவில் தற்போது ஓபிஎஸ் ஈரோடு கிழக்குத் தேர்தலில் களத்தில் குதிக்கப் போவதுதான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறது.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜிகே வாசன் எடப்பாடி தரப்பில் தஞ்சம் புகுந்திருக்கும் நிலையில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் தான் நாமக்கல் தங்கமணி ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு நாமக்கல் தங்கமணிக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. இதில் எடப்பாடி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான நாமக்கல் தங்கமணி, செங்கோட்டையன், ஜிகே வாசன் கட்சியைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய தங்கமணி ஓ.பன்னீர்செல்வத்தை திமுகவின் பீ டீம் என மிகக் கடுமையாக வசைப்பாடி இருக்கிறார்.

கூட்டத்தில் பேசிய அவர்,”நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்பதெல்லாம் நோக்கமே கிடையாது. திமுகவில் சொற்படி நடக்க வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கம். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி வழிவந்த அதிமுகவினர். கடந்த தேர்தலில் எப்படியும் வெற்றி விடலாம் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தான் நாம் ஏமாந்து விட்டோம்.

அதனால் வெற்றி நம் கையை விட்டுப் போனது. கடந்த தேர்தலில் ஆரம்பத்தில் 150 தொகுதிகளை அதிமுக முன்னணியில் இருந்தது. 30 தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றதால் தோல்வியை தழுவினோம். தற்போது நாம் சோதனையான காலகட்டத்தில் இருக்கிறோம். இதனை சாதனையாக மாற்ற வேண்டும். தற்போதைய சூழ்நிலை ஒற்றை தலைமை இருந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று கருதி ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசிப் பார்த்தோம்.

ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவே நாம் அவர்களை கண்டு கொள்ளவும் தேவையில்லை. இரண்டு ஆண்டுகளாக திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயரை நாம் சாதகமாக மாற்றிக் கொள்ளலாம். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து ஓட்டு போட வைப்பது அதிமுகவின் கடமை. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடப்பதால் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே எங்களை தேர்தல் ஆணையம் வெளியேற்றிவிடும்.

அந்த சமயத்தில் ஆளும் கட்சியினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எனவே அதிமுகவினர் விழிப்போடு பணியாற்ற வேண்டும். தற்போதைய சூழலில் திமுகவை சேர்ந்தவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். கரூரிலிருந்து வந்தவர் திமுகவினருக்கு சேர வேண்டிய பங்குத் தொகையை அபகரித்துக் கொள்வதாக அவர்கள் கூறி வருகிறார்கள். அதிமுகவினர் அர்ப்பணிப்போடு பணியாற்றினால் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி’’ எனக் கூறினார்.

இதற்கிடையே ஜி.கே.வாசனை சந்தித்து ஓ-பிஎஸ் டீமும் ஆதரவு கோரியிருப்பதுதான் அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal