ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்யும் பணிகளை தமிழக காங்கிரஸ் மேலிடம் தொடங்கி உள்ளது. கட்சி நடைமுறைப்படி வேட்பாளர் பெயர் பட்டியலை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்ப வேண்டும். டெல்லி மேலிடம் வேட்பாளர் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள இளங்கோவன்தான் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறி விட்டனர். இளங்கோவன் மனதளவில் இன்னும் பாதிப்பில் இருந்து மீண்டு வராததால் இன்னும் போட்டியிடும் மனநிலைக்கு வரவில்லை.
ஆனால் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அனைத்தும் இளங்கோவன்தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. தி.மு.க. தலைமையும் இளங்கோவன்தான் சரியான வேட்பாளராக இருக்க முடியும் என்று கருதுகிறது. தொகுதியில் பிரபலமானவர். தனிப்பட்ட செல்வாக்கு உடையவர். இப்போது மகனை இழந்திருப்பதால் அனுதாபமும் இருக்கும்.
எனவே வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று வற்புறுத்தி வருகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் காஞ்சிபுரம் எம்.பி.யுமான பி.விசுவநாதன் இன்று இளங்கோவனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நீங்கள் போட்டியிடுவதுதான் காங்கிரசுக்கு பலம் என்று வற்புறுத்தி இருக்கிறார்.
இளங்கோவன் மிக மூத்த காங்கிரஸ் தலைவர். மத்திய மந்திரி, எம்.பி., மாநில தலைவர் என்று பல பதவிகளையும் வகித்தவர். இந்த தருணத்தில் அவரது வெற்றியின் மூலம் சட்டசபையிலும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவை எதிர்த்து போராட வலிமையான ஆளுமை கிடைக்கும் என்றார். இளங்கோவனை பொறுத்தவரை கட்சி எடுக்கும் முடிவை பொறுத்து தனது முடிவையும் மாற்றிக்கொள்வார்.
மேலும் தனது 2-வது மகன் சஞ்சய் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் ஒத்துக்கொள்ளும் மனநிலையில் இருப்பதாக அவரை சந்தித்தவர்கள் கூறுகிறார்கள். சஞ்சய் சம்பத்தை ஒரு வேளை நிறுத்தினால் அரசியல் அனுபவம் இல்லாதவர், இதுவரை அவர் சாதித்தது என்ன? என்ற விமர்சனங்களும் வரும். கடந்த தேர்தலில் காங்கிரசுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 8 ஆயிரம்தான். எனவே பலமான வேட்பாளராக களம் இறக்க வேண்டும் என்பது காங்கிரசின் எண்ணமாக உள்ளது. அந்த வகையிலும் இளங்கோவன்தான் பொருத்தமான வேட்பாளராக இருப்பார் என்ற கருத்து தி.மு.க. கூட்டணி கட்சியினரிடம் உள்ளது.
இது தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது, கட்சிக்கென்று நடைமுறை விதிகள் உள்ளது. கட்சி மேலிடம் தான் வேட்பாளரை அறிவிக்கும் என்றார். இதற்கிடையில் இன்று தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.