இரட்டை இலைச் சின்னம், ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. என யாரையும் கண்டுகொள்ளாமல் தனி ‘தில்’லுடன் களத்தில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அதே சமயம், ‘கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட இந்த முறை பாருங்கள்’ என ‘சேலஞ்ச்’ செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி!

‘கிழக்கு யாருடைய இலக்கு’ என்ற தொனியில் அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி ‘கெத்து’ காட்டி வந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலை வைத்தாவது இணைந்துவிடலாமா என ஓ.பி.எஸ். கணக்குப் போட்டார். இந்த நிலையில்தான், பழனிச்சாமி அணியுடன் பேச தயாராக உள்ளதாக கூறியுள்ள ஓ.பன்னீர் செல்வம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று கூறியுள்ளார். ஒற்றுமையாக செயல்படவே விரும்புவதாகவும் ஒருபோதும் இரட்டை இலை முடங்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் அழைப்பை எடப்பாடி பழனிச்சாமி அணி நிராகரித்துள்ளது.

அதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என சூளுரைத்து களத்தில் இறங்கியிருக்கிறது எடப்பாடியார் டீம். அதே சமயம், தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் கொடுக்கப்படும் என மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான ஈரோடு முத்துசாமி நேற்று நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

மேலும் பேசிய அமைச்சர் முத்துசாமி, ‘உரிமை இருப்பவர்களிடம் மக்கள் கோபத்துடன் கேள்வி கேட்பார்கள் அதனை பார்த்து நீங்கள் கோபப்பட்டுவிடக் கூடாது. காரணம், இவர்கள் செய்வார்கள்… செய்யக்கூடியவர்கள் என்பது தெரிந்துதான் மக்கள் கேட்பார்கள்…’ என்று நேற்று புலம்பித் தள்ளிவிட்டார்.

தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள்… கொங்குமண்டலத்திற்கு கடந்த பத்து ஆண்டுகளில் செய்த வளர்ச்சி திட்டப்பணிகள் ஆகியவற்றை கொண்டு இடைத்தேர்தலில் களத்தில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றாலும், வாக்கு வித்தியாசத்தைதான் பார்க்க வேண்டும். ஏனென்றால், இடைத்தேர்தலைப் பொறுத்தளவிற்கு ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் ஆனாலும், மக்கள் என்ன நினைக்கிறார்கள்… அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கருத்துக் கணிப்பில் கூட கணிக்க முடியாது என்பதையும் மறுக்க முடியாது உண்மை.

இந்த நிலையில்தான், கொங்கு மண்டல பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘ஈரோடு கிழக்குதான் எங்கள் இலக்கு… இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. அவ்வப்போது பி.ஜே.பி. கட்சியைப் பற்றி பேசுகிறீர்கள்… ப்ளாஷ் நியூஸ் போடுகிறீர்கள். தமிழகத்தில் எத்தனை பேர் பி.ஜே.பி. உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்ற கணக்கு உங்களுக்கு தெரியுமா… வெறும் அண்ணாமலை ஒருவரை மட்டுமே நீங்கள் முன்னிலை படுத்துகிறீர்கள்’ என்று நக்கலாக பேசியவர். கரூர் டீமை ஈரோடு கிழக்கிற்கு நேற்று இரவே அனுப்பி, மக்கள் மனநிலை… உள்பட பல்வேறு விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் அனுப்புமாறு உத்தரவிட்டிருக்கிறாராம். விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் காட்டில் பண மழை பெய்யும்!’’ என்றனர்.

ஈரோடு கிழக்கைப் பொறுத்தளவிற்கு இரு தரப்பிற்கும் டஃப் பைட்டாகத்தான் இருக்கும் என்பதுதான் பத்திரிகையாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal