‘அ.தி.மு.க.வின் கோட்டை கொங்கு’ என்பதை நிரூபித்துக் காட்ட ‘எதற்கும் தயார்’ என்ற தொனியில் களத்தில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் பெரிதாக என்ன நடந்துவிட போகிறது காங்கிரஸ் – தமிழ் மாநில காங்கிரஸ் இடையே மோதல் நடக்க போகிறது. ஆளும் திமுக – காங்கிரஸ் கூட்டணிதான் தனது “பவரால்” வெல்ல போகிறது என்றுதான் அரசியல் நிபுணர்கள் பலர் கணித்தனர். ஆனால் அவர்களின் கணிப்புகளை பொய்யாக்கி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்ற முடிவை எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கே தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார்கள். இவர் மற்றும் இவரது உறவினர்கள் ஈரோடு கிழக்கு சடமன்றத் தொகுதியில் வசிக்கிறார்கள்.
அனைத்துதரப்பு மக்களும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம். தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 19.01.2023 வியாழக்கிழமை காலை, அ.இ.அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள்.
அப்போது இந்த இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் த.மா.கா வின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன். மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது. தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட த.மா.கா வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி இதன் மூலம் மிகப்பெரிய செக் ஒன்றை வைத்து இருக்கிறார். எடப்பாடியின் இந்த முடிவால் இங்கே பாஜக போட்டியிடுவது சிக்கலாகி உள்ளது. இங்கே பாஜக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வந்தன. பாஜக சார்பாக இங்கே மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது, அல்லது மாநில பாஜக வேளாண் செயலாளர் ஜிகே நாகராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. கொங்கில் தங்கள் பவரை காட்டும் விதமாக பாஜக இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இங்கே எடுக்கும் வாக்கு விகிதத்தை வைத்து ( தோல்வியே அடைந்தாலும்) லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களை அதிமுக கூட்டணியில் கேட்கும் வாய்ப்புகள் இருந்தன.
ஆனால் இப்போது அதிமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளதால் பாஜக அதன் வேட்பாளரை களமிறக்குவது சிக்கலாகி இருக்கிறது. ஏனென்றால் பாஜக அதிமுகவிற்கு எதிராக வேட்பாளரை களமிறக்கினால், அடுத்த வருடம் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் கூட்டணி வைப்பது சிக்கல் ஆகும். லோக்சபா தேர்தலில் அதிமுகவிடம் போய் இடங்களை கேட்பது சிக்கல் ஆகும். மேலும் அதிமுகவை எதிர்த்தால் அங்கு வெகுவாக வாக்குகள் பிரியும. அப்படி நடந்தால் திமுக – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி உறுதியாகும். இன்னொரு பக்கம் இங்கே அதிமுக போட்டியிடுவதால், தனியாக பாஜக போட்டியிடும் பட்சத்தில், பாஜகவின் வாக்கு வங்கி வெகுவாக சரியும்.
வாக்குகள் மிக மோசமான பாஜகவிற்கு சரியும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு இதுதான் நடந்தது. அப்போது அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜக போட்டியிட்டது. அதே நிலைதான் இப்போது ஈரோடு கிழக்கிலும் ஏற்படும். கொங்கிலேயே பாஜக அடி வாங்கும் நிலை ஏற்படும். இன்னொரு பக்கம் பாஜகவை கழற்றிவிடவும் எடப்பாடி தயாராகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் சிவி சண்முகம் கூட திமுக – பாஜக கூட்டணி வைக்க போவதாக சொல்லி இருந்தார். இதை எடப்பாடியும் மறுக்கவில்லை. அப்படி என்றால் பாஜகவை கழற்றிவிடவும் எடப்பாடி தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.
இதனால் அதிமுக கூட்டணி வேண்டும் என்றால் பாஜகதான் இறங்கி செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. கூட்டணி வேண்டும் என்றால் ஈரோடு கிழக்கில் போட்டியிடாதீங்க என்று பாஜகவிற்கு எடப்பாடி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். பாஜக இங்கே என்ன நிலைப்பாட்டை எடுக்கும்.. கூட்டணியை காக்க போட்டியில் இருந்து விலகுமா? கொங்கில் பவரை காட்ட போட்டியிட முடிவு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடியின் வியூகம் எந்தளவிற்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!