தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பாக விளக்க அளிக்கை வெளியிட்டது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி, ‘ஆளுநர் ரவியின் விளக்க அறிக்கையானது, அந்த கிணத்தையே காணலைன்னு சொல்லிட்டாங்க கதையாக இருக்கிறது’ என ஆவேசமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழகம் என இருக்க வேண்டும் என்பது ஆளுநர் ரவி பேசியதாக ஊடகங்களில் வெளியான செய்தி. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். இதனால் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் விழாவில், தமிழ்நாடு வாழ்க எனும் முழக்கங்கள் எதிரொலித்தன.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ரவி நேற்று விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்று பண்பாட்டுச் சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ அல்லது அனுமானம் செய்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது” என்று கூறியுள்ளார். எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் தருகிறேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,

‘‘இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர், தமிழ்நாடு- தமிழ்நாடு என்று சொல்லும்போது இங்கு பெரிய ஆரவாரத்தை காண முடிந்தது. அதற்கு ஒரு பின்னணி கதை இருக்கிறது. இன்னைக்கு அந்த கதை இல்லாம போயிருச்சு. அந்த கிணத்தையே காணலைன்னு சொல்லிட்டாங்க. நான் சொல்லாத ஒன்றை சொல்லிவிட்டீர்கள் என்று இங்கே உருவாகிய அந்த புரட்சிக் கனல், அவர்களை சொல்ல வைத்திருக்கிறது. சாதாரணமாக மக்களை உரசிப் பார்த்தால் தமிழர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள்.

ஆனால் அவர்களை கொஞ்சம் சீண்டி, சுரண்டிப் பார்த்தால் அதுல உள்ளே தெரியக் கூடிய அந்த தீ கங்கு இன்னும் அணையவில்லை என்பதை புரிந்து கொள்கிற போது, யாராக இருந்தாலும் நான் அப்படி சொல்லவே இல்லை என்று சொல்ல வேண்டிய ஒரு நிலையை நாம் உருவாக்கிக் காட்டி இருக்கிறோம்’’ என கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal